Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய சிறை முன்பு தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நாளை முற்றுகைப் போராட்டம் .தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் அறிவிப்பு

0

'- Advertisement -

எல்லை தாண்டிய வகையிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் .. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப் பேட்டி

Ad banner

திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். சரீப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, சிறைவாசிகளின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் தலைமை செயலாளரை மாற்ற வலியுறுத்தியும், திருச்சி மத்திய சிறை முன்பு தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 18 சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் கேட்பது விடுதலை அல்ல; சட்டப்பூர்வமான விடுமுறையான பரோல் மட்டுமே. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்த சிறைவாசிகளுக்கு ஆண்டுக்கு 120 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போதைய ஆட்சியில் தலைமைச் செயலாளரின் முடிவால் அந்த பரோல் மறுக்கப்படுகிறது. இதற்கு பொறுப்பான தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

மேலும், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் வெளியிடப்பட்ட அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டதற்கும் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலே காரணம். பாஜக ஆட்சிக் காலத்தில் தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் நியமிக்கப்பட்ட தலைமை செயலாளருக்கு வழங்கப்பட்ட பணிநீட்டிப்பை தமிழக அரசு ரத்து செய்து, அவரை உடனடியாக மாற்ற வேண்டும்.

தமிழக அரசு மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் தலைமைச் செயலாளர் செயல்படுகிறார். அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகளை வெறும் சட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். தற்போதைய தவெக அரசை நாங்கள் கட்சி 100 சதவீதம் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது தங்களது கடமை.

தற்போதைய அரசுக்கு போதிய எண்ணிக்கை இல்லாததால் அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டிய சூழல் இருப்பதாக கருதக்கூடாது. அதிகாரிகளைவிட மக்களின் பேராதரவு அரசுக்கு உள்ளது. எனவே அரசு தைரியமாக செயல்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். தற்போதைய தலைமைச் செயலகம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசு நிர்வாகத்துக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

இஸ்லாமிய சிறைவாசிகள் தொடர்பான விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம். அமைச்சரவையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக வலியுறுத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு குறைந்தபட்சம் பரோல் வழங்குவதற்காவது குரல் கொடுக்க வேண்டும்.

சமூகநீதித்துறை மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். அமைச்சர்  பரிசீலிக்கப்படும் என்று மட்டுமே தெரிவித்துள்ளார். அந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

தவெக கூட்டணிக்கு பாமக ஆதரவு அளித்தால், தங்களைப் போன்றவர்கள் அதை வரவேற்பார்கள். பாமக நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய அரசியல் கட்சி. தமிழர் நலன் சார்ந்த அரசியலில் அக்கட்சிக்கும் முக்கிய பங்கு உள்ளது.

திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அரசு தமிழகத்தில் வர வேண்டும் என்பது தங்களது நீண்டகால விருப்பம். அந்த விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது. தவெக அரசை எதிர்ப்பது தங்களது நோக்கம் அல்ல. அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே தங்களது கடமை. எனவே தவெக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசை விமர்சிப்பதில் ஒரு எல்லை இருக்க வேண்டும். எல்லை தாண்டிய வகையிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். யார் பயன்படுத்தினாலும் ஜனநாயகத்துக்கு எதிரான அல்லது தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் விமர்சனங்கள் ஜனநாயக பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.