Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்தின் போது எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தாய் மற்றும் குழந்தைக்குத் தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் நிவாரணமாக வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்கள் காரணமாக அவருக்கு அவசரமாக ரத்தம் செலுத்தப்பட்டது. ஆனால், மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்டுச் செலுத்தப்பட்ட அந்த ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்தது பின்னர் தெரியவந்தது. இதனால் அப்பெண்ணுக்கும், அவருக்குப் பிறந்த குழந்தைக்கும் எச்ஐவி தொற்று பரவியது.

 

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் கடுமையான அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்பிற்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அவசரகால செலவுகளுக்காக ரூ.2.50 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாய் மற்றும் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் கருணைத்தொகையாக வழங்க அரசு முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனைப் பதிந்து கொண்ட நீதிபதி, “மனுதாரரான தாய்க்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.2.50 லட்சத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை இரண்டு வாரங்களுக்குள் எவ்வித நிபந்தனையுமின்றி நேரடியாக அவரது வங்கி கணக்கில் வழங்க வேண்டும். அதேபோல, குழந்தையின் பெயரிலான ரூ.20 லட்சம் தொகையை ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ வட்டியுடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.