ஆபாசத் தூண்டல் மூலம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக திருச்சி சாதனா, மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் மீது காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகார்

சமூக வலைத்தளங்களில் ஆபாசத் தூண்டல் மூலம் இளைஞர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை மற்றும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் பதிவுகள் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சப்ஸ்கிரிப்ஷன்’ வசதி மூலம் மாதம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது இதுமட்டுமின்றி, பிறந்தநாளுக்கு வீடியோ காலில் வாழ்த்துக் கூற 6,000 ரூபாய், பிராண்ட் புரமோஷனுக்கு 50,000 ரூபாய், பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு 1,000 ரூபாய் எனப் பல்வேறு சலுகைகளை அறிவித்துப் பணம் ஈட்டி வந்துள்ளார்.
இதே பாணியில் டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனாவும் சமூக ஊடகங்களில் கவர்ச்சி காட்டிப் பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித் சாக்கோ, சட்டக் கல்லூரி மாணவர்களுடன் சென்று சேலம் மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தர்ஷா குப்தா, திருச்சி சாதனா, ஹனி சென்னை, சூர்யபிரபா, அபிநயா சித்ரா, பிரியங்கா ராஜ் என நூற்றுக்கணக்கான நபர்கள் சமூக வலைத்தளங்களில் இச்சையைத் தூண்டும் ஆபாசமான உள்ளடக்கங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் இச்செயல்களுக்காக 599 ரூபாயில் தொடங்கி 16,000 ரூபாய் வரை 5 முதல் 6 ‘லெவல்கள்’ வைத்துள்ளனர்.
சூப்பர் சாட், கோல்ட் சாட், பெர்சனல் சாட், சாட்டிஸ்பேக்ஷன் சாட் எனப் பெயரிட்டுப் பணமோசடி செய்கிறார்கள். இந்தச் சப்ஸ்கிரிப்ஷன்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லாததால், சிறுவர்கள் தங்களுக்குப் பணம் தேவைப்படும்போது சங்கிலி பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டப்படுகிறார்கள். சாமானிய மக்கள் முப்பது நாட்களும் கடினமாக உழைத்து 15,000 சம்பாதிக்கும் சூழலில், இவர்கள் ஆபாசமாகப் பேசி அவர்களிடம் பணம் பறிக்கிறார்கள்.இது மற்ற பெண்களுக்கும் தவறான முன் உதாரணமாக மாறிவிடக் கூடாது என்பதால், இவர்களின் ஒட்டுமொத்தப் பக்கங்களையும் முடக்குவதோடு, அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து உரியத் தீர்வு வழங்க வேண்டும்”என்று வழக்கறிஞர் அஜித் சாக்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இணையதள ஆபாசக் கலாச்சாரத்திற்கு எதிராக சேலத்தில் வழக்கறிஞர் தந்துள்ள இந்தப் புகார், சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

