திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் மூழ்கி இறந்த வாலிபரின் உடல் இன்று ஓடத்துறை அருகே மீட்பு.
திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் பார்த்தசாரதி ( வயது 17). இவர் திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இவரும், இவரது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் திருச்சி ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தடுப்பணையில் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட சக மாணவர்கள் காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேரை மீட்டனர். ஆனால் பார்த்தசாரதியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. 
தகவலறிந்த திருச்சி கோட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் ரப்பர் படகு உதவியுடன் காணாமல் போன பார்த்தசாரதியை தேடி வந்தனர். இந்நிலையில் இறந்த வாலிபரின் உடல் இன்று ஓடத்துறை அருகே மீட்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

