செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற பாலியல் வழக்கில் சிக்கி சென்னையில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிவசங்கர் பாபா, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி கைது செய்து அழைத்து வர, துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விமானம் மூலம் டேராடூன் விரைந்தனர்.
சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் இருதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் டேராடூன் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிவசங்கர் பாபா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டது தெரிய வந்தது. அவர் டெல்லி போய் விட்டதாகவும் கூறப்பட்டது.
உடனே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் டெல்லி போலீசாரை உஷார்படுத்தினார். தமிழக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசாரும் டெல்லி விரைந்தனர்.
சிவசங்கர் பாபாவின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது அவர் டெல்லி சித்தரஞ்சன் பார்க் பகுதியில் தனது சீடர் ஒருவரின் உதவியுடன் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கி இருப்பது தெரியவந்தது.
அவரை டெல்லி போலீசார் உதவியுடன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அங்குள்ள 30 விடுதிகளை சோதனை போட்ட பிறகே, சிவசங்கர் பாபா தங்கி இருந்த விடுதியை போலீசார் கண்டுபிடித்தனர். கைதான சிவசங்கர் பாபாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி கோர்ட்டில் நேற்று பிற்பகலில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்தது. இதனையடுத்து அவரை விமானத்தில் சென்னை அழைத்து வர சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதன்படி, இரவோடு, இரவாக பாபாவை சென்னைக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.
எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவசங்கர் பாபா, இன்று( வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.