ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் இணைந்து திருச்சி காளிதாசன் பல்கலைக்கழகத்தில் நீர்நிலைகளில் மறுசீரமைப்பு பணி

ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் இணைந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நீர்நிலைகள் மறுசீரமைப்பு பணி தொடக்கம்:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் உறிஞ்சு குளங்களை மறுசீரமைத்து, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் மற்றும் எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் அமைப்புகள் இணைந்து சமூக நலப்பணியைத் தொடங்கியுள்ளன.
பல்கலைக்கழகத்தின் தூய்மை மற்றும் பசுமை முனைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். ராஜகுமார் வேண்டுகோளின் பேரில், பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் உறிஞ்சு குளங்களைக் கட்டம், கட்டமாகச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் தலைவர் ப. ராஜ்மோகன், எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் அறங்காவலர் டி. ராம்குமார், துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர் வேலு ராஜேஷ் கண்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் ஆர். காளிதாசன் ஆகியோர் பங்கேற்றுப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பல்வேறு ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள், எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் நிர்வாகிகள், ‘மண்ணும் மரமும்’ அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாகப் பங்கேற்றுத் தங்களது முழு ஒத்துழைப்பை உறுதியளித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்நிலைகளின் நீர் சேமிப்புத் திறன் மேம்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பசுமைப் பரப்பு மேம்பாட்டிற்கும் முக்கியப் பங்களிப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் இணைந்து செயல்படும் இத்தகைய முயற்சிகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டமாக அமையும் என்றும், எதிர்காலத் தலைமுறைக்கான நீர் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

