பாலியல் வழக்கில் ஜெம் கிரானைட் வீரமணி சிக்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சியினருக்கு ரூ 70 கோடி வரை செட்டில்மென்ட் வழங்க உதவியதாக எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன்
பாலியல் வழக்கில் ஜெம் கிரானைட் வீரமணி சிக்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சியினருக்கு ரூ 70 கோடி வரை செட்டில்மென்ட் வழங்க உதவியதாக ரயில்வே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு பூதாகரமாகியுள்ளது. அடுத்தடுத்து அந்த வழக்கில் அதிர்ச்சிகரமான அப்டேடுகள் வந்த வண்ணம் உள்ளது. ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி, சிறுமிகளை படிக்க வைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக 9 சிறுமிகள் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெம் கிரானைட் வீரமணி குறித்த விவகாரம் கடந்த ஆட்சியிலேயே நடந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் விசாரணையில் தனது பெயர் சிறுமிகள் பாலியல் வழக்கில் (எஃப்ஐஆர்) சிக்காமல் இருக்க வீரமணி, காவல் துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் ரூ. 70 கோடி மதிப்பிலான பணத்தை செட்டில் செய்ததாக சொல்லப்படுகிறது.
சென்னை ஈசிஆர், ஊட்டியில் உள்ள வீரமணிக்குச் சொந்தமான ரூ. 130 கோடி மதிப்பிலான நிலங்களை ரூ 70 கோடிக்கு விற்பனை செய்து அந்த பணத்தை பலருக்கும் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போல் பணம் பிரித்து கொடுத்த விவகாரத்தில் SRMU ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டது.இதையடுத்து பிரகாஷிடம் விசாரணை நடத்த சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்தான் வீரமணியின் சொத்தை விற்று ரூ 70 கோடியை பரிமாற்றம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளதாம். எனினும் பிரகாஷ் அவரது வீட்டில் இல்லையாம். தற்போது வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் ரூ 10 கோடி கைமாறியதை விசாரிக்க கூடுதல் காவல் ஆணையர் தலைமையில் குழு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. பணம் கைமாறிய புகாரில் யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அடையாளம் தெரியாது நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும் அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வீடியோவை ஆய்வு செய்த போது வயதானவர் ஒருவர் 13 வயது மதிக்கத்ததக்க சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது.
இதன் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
வீடியோவில் இடம் பெற்றிருந்த அந்த முதியவர், பிரபல கிரானைட் தொழிலதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (வயது 84) என்பது தெரியவந்தது.
மேலும் வீரமணி தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புகளை சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்புடைத்திருந்தார். அந்த வீட்டிற்குள் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும் மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகளை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து சில புகைப்படங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

