Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன் லாக்கப் டெத்.சிபிசிஐடி க்கு வழக்கு மாற்றம். டிஜஜி சரவண சுந்தர்.

0

திருச்சியில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்து, விசாரணை நடத்தப்படும் என திருச்சி மண்டல டி.ஐ.ஜி.சரவண சுந்தர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம், நேற்று அதிகாலை, 6:30 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் மொபைல் போன் திருடியுள்ளார். கோவில் காவலாளிகளும், பக்தர்களும் அவரை பிடித்து, சமயபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, அரியலூர் மாவட்டம், ஓரியூர் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து மகன் முருகானந்தம் (வயது37,, என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து, அவரிடம் விசாரிப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்த போது, காலை 8:30 மணியளவில், முருகானந்தம், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

கழிவறைக்கு சென்றவர் மீண்டும் வராததால், போலீஸ்காரர் ஒருவர், கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், கழிவறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து, சமயபுரம் போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

லால்குடி டி.எஸ்.பி., சீதாராமன் மற்றும் திருச்சி மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார், மண்ணச்சநல்லுார் தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் வருவாய்த் துறையினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முருகானந்தம், இடுப்பிலும், கழுத்திலும் அணிந்திருந்த கயிறுகளை பயன்படுத்தி, போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சமயபுரம் போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்த முருகானந்தம் மது பழக்கம் உள்ளவர் என்றும், கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்ததாகவும், அவரது தாயை அடித்து கொலை செய்த வழக்கு, அரியலூர் மாவட்டம், கூத்துார் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி.,யிடம் கேட்ட போது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், கழிவறைக்கு சென்று, அவர் அணிந்திருந்த கயிறுகளை பயன்படுத்தி துாக்கிட்டு கொண்டது தெரிய வந்தது. அடுத்து, மாஜிஸ்திரேட்டின் நேரடி விசாரணை மற்றும் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடைபெறும், என்று தெரிவித்தார்.

திருச்சி மண்டல டி.ஐ.ஜி., சரவணசுந்தர், தற்கொலை செய்தவர் உடலை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.

அதன் பின், அவர் கூறியதாவது:
போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு வைத்திருந்த முருகானந்தம் தற்கொலை செய்த சம்பவம், 176 என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்படுகிறது.சம்பந்தப்பட்ட காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.