திருச்சியில் 80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி

திருச்சி வி என் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் துரை மாணிக்கம் (வயது 80) இவர் நேற்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி இங்கு உறவினர் புதுமனை புகு விழாவிற்கு வந்து உள்ளேன்.நீங்கள் பெரியவராக இருக்கிறீர்கள். நான் புதிதாக நகை வாங்கி உள்ளேன். அதனை ஆசீர்வதித்து கொடுங்கள் என்று கூறி தன் கையில் வைத்திருந்த ஒரு நகையை துரை மாணிக்கத்திடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கி துரை மாணிக்கம் ஆசீர்வாதம் செய்து திருப்பி கொடுத்தார்.
இதையடுத்து அந்த மர்ம ஆசாமி துரை மாணிக்கம் கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகையை பார்த்துவிட்டு இந்த நகை நன்றாக இருக்கிறது. இதுபோல் டிசைனில் நானும் நகை செய்யலாம் என்று இருக்கிறேன்.
கொஞ்சம் அதனை காட்டுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து துரை மாணிக்கம் தனது கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை கழற்றி மர்ம ஆசாமியிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு மர்ம ஆசாமி துரை மாணிக்கத்திடம் எனது நகையை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று நீங்கள் பூஜை செய்து எடுத்து வாருங்கள் எனக்கு சற்று களைப்பாக இருக்கிறது. இங்கேயே நிற்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து மர்ம ஆசாமி கூறிய வார்த்தையை நம்பி துரை மாணிக்கம்
ஆசாமி கொடுத்த நகையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு வெளியே வந்து பார்த்தார். அப்பொழுது அங்கு நின்றிருந்த மர்ம ஆசாமியை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த துரை மாணிக்கம் அருகில் உள்ள நபர்களிடம் கேட்டபோது யாரும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
பிறகு தான் துரை மாணிக்கத்திற்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிய வந்தது.தன்னுடைய நகையை மர்ம ஆசாமி திருடி சென்று உள்ளான் என தெரிய வந்தது.மேலும் தன்னிடம் இருந்த நகையை அங்கு இருந்தவர்களிடம் காட்டிய போது அந்த நகை கவரிங் நகை என தெரிய வந்தது.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரை மாணிக்கம் கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு ப்பதிவு செய்து முதியவரிடம் 3 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

