சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தம்மை சாமியார் எனக் கூறிக் கொண்டிருந்துள்ளார். இவரது மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக மகன், மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் 17 வயது மகளுக்குத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த உறவினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு ஜாமீனில் வெளிவந்த அவர், சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்கும், தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிபதி உத்தரவுப்படி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டதில், போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர், குழந்தையின் தந்தை இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் சிறுமியின் தாயிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி சில நாட்கள் தந்தையுடன் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து,
தந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் அவர் மகளை வன்கொடுமை செய்தது உறுதியானது.
இதையடுத்து தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.