Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடுவது யார்? டி20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.

0

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் குரூப்-2-ல் முதலிடம் பிடித்த முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, குரூப்-1-ல் 2-வது இடம் பெற்ற ஆஸ்திரேலியாவுடன் துபாயில் இன்று மோதுகிறது.

நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி பாகிஸ்தான். ‘சூப்பர்-12’ சுற்றில் தனது பிரிவில் 5 ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று கம்பீரமாக முதலிடம் பிடித்தது.

இதில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்ததும் அடங்கும். பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் குறிப்பிட்ட வீரரை சார்ந்து இருக்காமல் எல்லா வீரர்களும் அசத்துகிறார்கள்.

முந்தைய ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சோயிப் மாலிக் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். முகமது ஹபீஸ், ஆசிப் அலி ஆகியோரும் ஓரிரு ஆட்டங்களில் கவனத்தை ஈர்த்தனர்.

எல்லாவற்றையும் விட கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தொடக்க வரிசையில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பாபர் அசாம் 4 அரைசதம் உள்பட 264 ரன்களும், முகமது ரிஸ்வான் 2 அரைசதம் உள்பட 214 ரன்களும் குவித்துள்ளனர்.

இதே போல் பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், இமாத் வாசிம் , ஷதப் கான் ஆகியோர் மிரட்டுகிறார்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் அமீரகத்தில் கடைசியாக விளையாடிய 16 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி தோற்றதில்லை. அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது பிரிவில் 4 வெற்றி ( தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இங்கிலாந்துக்கு எதிராக) 2-வது இடம் பிடித்தது. இதில் வங்காளதேசத்தை 73 ரன்னில் சுருட்டி அந்த இலக்கை 6.2 ஓவர்களில் எட்டியதால் ‘ரன்ரேட்’ அடிப்படையில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி அரைஇறுதி அதிர்ஷ்டத்தை ஆஸ்திரேலியா பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சொதப்பிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முக்கியமான கட்டத்தில் பார்முக்கு வந்து விட்டார். 2 அரைசதம் உள்பட 187 ரன்கள் சேர்த்துள்ள அவர் அரைஇறுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் தான் பாகிஸ்தானின் பவுலிங் வியூகத்தை உடைக்க முடியும்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா (11 விக்கெட்), ஹேசில்வுட் (8 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (7 விக்கெட்) உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வெல்லாத ஆஸ்திரேலிய அணி அந்த கனவை எட்டுவதற்கு இன்னும் இரண்டு வெற்றி பெற வேண்டி உள்ளது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா , அப்ரிடி நல்ல பார்மில் உள்ளார். எனவே ‘பவர்-பிளே’யில் (முதல் 6 ஓவர்கள்) அவரை சமாளிப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் ‘பவர்-பிளே’யில் சிறப்பாக செயல்பட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை தொடரை பார்த்தாலே தெரியும்’ என்றார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 12-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. மற்றொரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இரவில் பனியின் தாக்கம் காரணமாக பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். அதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்கையே விரும்பும்.

இந்த உலக கோப்பையில் துபாயில் நடந்துள்ள 11 ஆட்டங்களில் 10-ல் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.