திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 86ம் ஆண்டு நிறுவன நாள் கொண்டாட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு .
திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற 86ஆம் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் பங்கேற்று, காற்றலை வழியாக பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் அமைக்கப்பட்ட 6 முன்னோடி வானொலி நிலையங்களில் ஒன்றாக உள்ளது திருச்சி அகில இந்திய வானொலி நிலையம். சென்னை மாகாணத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 1939ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருச்சியில் தொடங்கப்பட்டது இந்த வானொலி நிலையம்.
திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட மக்களுக்கு காற்றின் வழியாக செய்திகளையும், தகவல்களையும், மனதுக்கு இனிய நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.
வேளாண்மை, மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு, சினிமா, அரசியல், நாடகம், நாட்டுப்புறக் கலைகள், இசை, பரதம், நடனம், நாட்டியம் என அனைத்து துறைகளிலும் அளப்பரிய பங்களித்து பழைமை வாய்ந்த, புகழ் பெற்ற நிலையமாக திருச்சி பாரதிதாசன் சாலையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 85 ஆண்டுகள் நிறைவுற்றதையடுத்து, 86ஆவது நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், திருச்சி வானொலி நிலையத்துக்கு நேற்று வந்து, நேரலையில் பங்கேற்று நேயா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
மேலும் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தேசத் தலைவா்களின் அரிய உரைகளின் ஒலி தொகுப்புகளையும் கேட்டு ரசித்தாா். திருச்சி மண்டலச் செய்திப் பிரிவின் செயல்பாடுகள், நிலையத்தில் பராமரிக்கப்படும் பழைய கருவிகள், நவீன தொழில்நுட்பக் கருவிகளை பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளையும் கேட்டறிந்தாா்.
நிகழ்வில் திருச்சி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவு தலைவா் பிரிஸில்லா, வரைதல் வழங்கல் அலுவலா் ஜான்சன் மற்றும் நிலையத்தின் அனைத்துப் பிரிவு அலுவலா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.