திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி .
திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பாகளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாவி. இவரது மனைவி லதா காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு இந்த பகுதியில் மழை இன்றி கடுமையான புழுக்கம் நிலவியுள்ளது. இதனால் லதா வீட்டின் கதவைத் திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள்ளே புகுந்து லதாவின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்டு லதா கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது முட்புதர் ஒன்றில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதை கண்டு, அவரை பிடித்தனர். பின்னர் அவரை அங்குள்ள மரம் ஒன்றில் கட்டி வைத்து விடிய விடிய தர்ம அடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து புலிவலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் பொதுமக்களால் தாக்கப்பட்ட வாலிபரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா? என்பது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயற்சித்த சம்பவம் புலிவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.