முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள்.
இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி பற்றி உங்களுக்கு தெரியுமா..மியாசாகி (Miyazaki) மாம்பழங்கள் என்று சொல்லப்படுகிற மாம்பழ வகை ஜப்பான் நகரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் தான் இதற்கு Miyazaki என்ற பெயர் வந்தது. ஜப்பானில் இந்த பெயருக்கு “சூரியனின் முட்டை” என்று பொருள். இதில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
மியாசாகி மாம்பழங்களின் சுவை, மற்ற மாம்பழங்களை போல அல்லாமல் தனித்துவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மியாசகி மாம்பழத்தின் ஒரு கிலோ விலை ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
மேலும் இதில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.நம் வீட்டு கொல்லைப்புறங்களில், அடிக்கடி மாங்காய் மரங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் மியாசாகி மாம்பழங்களை, அதுபோல எல்லா இடங்களிலும் வைத்துப் பயிரிட முடியாது. இதை வளர்க்க குறிப்பிட்ட காலநிலை, மண்வளம் மற்றும் பிற காரணங்கள் சரியாக இருக்க வேண்டும். இந்த மாம்பழங்களை இந்தியாவில் பயிரிட்டு தோல்வி கண்டவர்கள் நிறைய பேர்.
ஆனால் சிலர் மியாசாகி மாம்பழங்களை இந்தியாவிலும் வளர்த்து சாதித்துக் காட்டியுள்ளனர்.
தற்போது உடுப்பியில் உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்த விவசாயியான ஜோசப் லோபோ மியாசாகி மாம்பழங்களை, இந்தியாவில் பயிரிட்டு சாதித்துக் காட்டி உள்ளார். அதன் மூலம் அவருக்கு 9 பழங்கள் கிடைத்துள்ளது. மேலும் இவர் ஒரு கிலோ மாம்பழத்திலிருந்து ரூ. 3 லட்ச ரூபாய் வருமானம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.ஜோசப் லோபோ இயற்கையை ரசிக்கும் நிபுணத்துவம் பெற்ற விவசாயி.
இவர் மியாசாகி மாம்பழத்தின் மதிப்பை உணர்ந்து, அவற்றை இந்தியாவில் பயிரிட்டு வெற்றி கண்டுள்ளார். மியாசாகி மாம்பழங்களின் விலை, இவ்வளவு கூடுதலாக இருப்பதற்கு அதன் மருத்துவ குணமே காரணம் என்று ஜோசப் லோபோ கூறியுள்ளார். ஜோசப் லோபோ, தனது தோட்டத்தில் உள்ள மியாசாகி மாம்பழங்களின் சைஸ் “மல்லிகா” என்று சொல்லப்படுகிற மாம்பழம் வகையை ஒத்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
பழுக்காத மாம்பழங்கள் ஊதா நிறமாகவும், முழுமையாக பழுத்தவுடன் சிவப்பு நிறமாக மாறும். கடலோரப் பகுதியில் ஈரப்பதம் மற்றும் உப்புத்தன்மை காரணமாக நிறம் மாறுபடலாம்.
இனி எதிர்கால அறுவடைகளில், இதன் வண்ணம் மாறுபடும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இங்கு பயிரிடப்படும் மியாசாகி மாம்பழங்களில் நம் நாட்டின் புவியியல் தாக்கம் இருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.லோபோ கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், மியாசாகி மரக்கன்றை நட்டுள்ளார். கடந்த ஆண்டு பூக்கள் பூத்த போதிலும், காய்கள் வரவில்லை.
இந்த ஆண்டு சுமார் ஏழு பழங்கள் காய்த்து உள்ளன. ஆனால் வானிலை மாற்றங்கள் ஒரு சவாலாக இருந்ததாகவும் ஜனவரி மாதத்தில் பெய்த மழையினால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.