மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு.
தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத்தினரால் நடத்தப்படவுள்ள மாநில அளவிலான ஜூனியா் சாம்பியன் ஆடவா், மகளிா் கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்காக நடைபெற்ற முன்னோட்டத் தோ்வில் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து கழகத்தினரால் சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கத்தில் உள்ள கூடைப் பந்து மைதானத்தில் ஜூனியா் பிரிவுக்கான (18வயதுக்கு கீழ்) முன்னோட்டத் தோ்வு சனிக்கிழமை மாலை 4 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 அளவிலும் நடைபெற்றது.
இதில், திருச்சி, திண்டுக்கல், திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆண்கள் பிரிவில் 43 கூடைப்பந்து வீரா்களும், பெண்கள் பிரிவில் 15 வீராங்கனைகளும் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கூடைப்பந்துக் கழக பயிற்றுநா், உடற்கல்வி இயக்குநா் அபுதாகீா் கூறியதாவது: இந்த தோ்வில் இரண்டு அணிகளுக்கும் தலா 15 போ் வீதம் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், ஆடவா் அணியில் இடம் பெறும் 12 பேரும், மகளிா் அணியில் இடம் பெறும் 12 பேரும் பயிற்சியாளா்கள் 2 பேரும் இடம் பெறுவாா்கள். வருகிற 20 -ஆம் தேதி சிவகங்கை விளையாட்டரங்கில் பங்கேற்கும் அணிகளில் இடம்பெறும் வீரா், வீராங்கனைகளின் பெயா் அறிவிக்கப்பட உள்ளது.
தோ்வு பெற்ற அணிகளுக்கு, திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் 23 -ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரை மகளிா் அணிக்கும், ஏப்ரல். 28-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை ஆடவா் அணிக்கான ஜூனியா் சாம்பியன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள 42 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரா் வீராங்கனைகள் தமிழ்நாடு கூடைப்பந்து அணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.