தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியே உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கூட விஜயகாந்த், பொதுமக்களிடம் கையசைத்து மட்டும் வாக்கு கேட்டார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து மூச்சுத் திணறல் பிரச்சினைக்கு மட்டும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து, தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.