பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முதலாவது அலையின் போது தமிழகத்தில் மின்கட்டணம் வசூலித்ததில் ஒரு சர்ச்சை நிலவியது. அதிகப்படியான தொகை வசூலிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் பரவலாக எழுந்தது.
இந்நிலையில் நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம் என மின்வாரிய அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்து கொள்ளலாம்.
பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாட்ஸ் அப் வழியாக போட்டோ அனுப்புவோர் தங்களுக்கான மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும்.
மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும்.
பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.