

திருச்சியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை ஊசிகள், மாத்திரைகள் சப்ளை செய்த வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சியில் பல்வேறு இடங்களில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து மாநகர போலீசார் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.
போதை ஊசிக்கு சமீபத்தில் ஒரு வாலிபரும் பலியானார்.இந்த நிலையில் திருச்சி செங்குளம் காலனி பால்வாடி அருகே சிறுவர்களுக்கும், பொது மக்களுக்கும் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்வதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரி மைமூன் பீவிக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் பாலக்கரை காவல்துறையினருடன் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்து விற்பனை செய்து கொண்டிருந்த திருவரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் (வயது 20) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 29 போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

