`

10 கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம்!’ – மார்க்கெட்டிங்கில் கலக்கும் சிவகங்கை மாணவர்
“ஒரு ஜிபி டேட்டா 30 ரூபாய் ஆகுது. நாங்க 449 ரூபாய்க்கு 10 கரும்பையும் 1 ஜிபி டேட்டாவையும் குடுக்கிறதைப் பார்த்துட்டு பலரும் வாங்கிட்டுப் போறாங்க. இந்தப் ஆஃபர் என்னோட படிக்கிற பசங்க சொன்ன ஐடியாதான். நாங்க எதிர்பார்த்தபடி, எங்க மார்க்கெட்டிங் டெக்னிக் நல்ல ஒர்க் அவுட் ஆயிருக்கு.’’
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, `10 கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம்’ என்கிற விளம்பரப் பதாகை சமூக வலைதளத்தில் வைரலானது. அந்தப் பதாகையில் இருந்த போன் நம்பருக்கு நாம் போன் செய்தபோது மோகன் என்பவர் பேசினார். இவர், `நம்ம ஊர் சந்தை’ என்ற பெயரில் சிவகங்கையிலும் மானாமதுரையிலும் இந்த கரும்பு கடையை நடத்தி வருகிறார். இங்குள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவருகிறார். அவருடன் பேசினோம்.
“மானாமதுரை, சிவகங்கை ஆகிய இரண்டு ஊர்களிலும் இந்தக் கரும்பு கடை நடத்திட்டு வர்றோம். நானும் என்னோட படிக்கிறவங்க 12 பேரும் சேர்ந்து இந்தக் கடையை நடத்திக்கிட்டு வர்றோம்.
நாங்க பெரிய அளவுல ஒரு பிசினஸ் பிளானை வச்சிருக்கோம். அந்த பிசினஸுக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படுது. அதை எப்படி சேர்க்கிறதுன்னு நாங்க யோசிப்பதான் எங்களுக்கு இந்தக் கரும்புக் கடை ஐடியா வந்துச்சு. இதுக்கு எங்க காலேஜ் புரபசர்ஸ், ஜூனியர்ஸ் எல்லாம் நிறைய உதவி செஞ்சாங்க.
இன்னைக்கு தேதிக்கு மக்கள் எல்லாருக்கும் இன்டர்நெட் டேட்டா ரொம்பவும் தேவையா இருக்கு. எதாவது ஒரு கடையில அவங்க ஒரு ஜிபி, ரெண்டு ஜிபின்னு வாங்கிகிட்டு இருக்காங்க. தவிர, இப்ப பொங்கல் பண்டிகைங்கிறதால, எல்லாரும் கரும்பு வாங்குவாங்க. இந்த இரண்டு சேர்த்து நாம ஏன் விக்கக்கூடாதுன்னு யோசிச்சோம். ஒரு நல்ல கரும்பு 50 ரூபாய்க்கு விக்குறாங்க.
ஒரு ஜிபி டேட்டா 30 ரூபாய் ஆகுது. நாங்க 449 ரூபாய்க்கு 10 கரும்பையும் 1 ஜிபி டேட்டாவையும் குடுக்கிறதைப் பார்த்துட்டு பலரும் சந்தோஷமாக வாங்கிட்டுப் போறாங்க. இந்தப் புதுமையான ஆஃபர் என்னோட படிக்கிற பசங்க சொன்ன ஐடியாதான். நாங்க எதிர்பார்த்தபடி, எங்க மார்க்கெட்டிங் டெக்னிக் நல்ல ஒர்க் அவுட் ஆயிருக்கு’’ என்றார்.ஹைபிரீட் ஆட்டோஸ் என்கிற பேர்ல ஒரு ஆட்டோ சர்வீஸை ஆரம்பிக்கப் போறோம். ஓலா, உபர் போல ஆப் மூலம் புக் செய்யாமல், எளிதா மிகக் குறைந்த விலையில் ஆட்டோ சேவையை மக்களுக்குத் தரப்போறோம். இதுக்கான பக்கா பிளான் ரெடியாயிட்டு இருக்கு.
எங்க காலேஜில Centre for Innovation and Entrepreneurship என்கிற அமைப்பு இருக்கு. அதாவது, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் இடம். முழுக்க முழுக்க மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கு பயன்படும் இடம். அதில் என்னுடைய பிசினஸ் ஐடியாவை செயல்படுத்தப் போறேன்’’ என்றார் பெருமை பொங்க.
போன மாசம் சோலார் மூலம் இயங்கும் ரயில்வே ட்ராலி ஒன்றை காரைக்குடி – அறந்தாங்கிக்கு இடையே ஓட்டி, வெற்றி பெற்றோம். இதற்காக, CONNECTathon என்கிற விழாவுல தமிழக முதல்வர்கிட்ட இருந்து ஒரு பரிசு வாங்கினேன்.
கல்லூரி முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதற்குள் என் அடுத்த இலக்கை வெற்றிகரமாக தொடங்கிவிடுவேன்’’ என்று நம்பிக்கையுடன் பேசி முடித்தார் மோகன்.
எதிர்காலத்தில் பல இன்னோவேஷன்களை கொண்டுவர நினைக்கும் மோகனுக்கு நம் பாராட்டுகள்!

