
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்கு, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை திடீரென கடித்து காயப்படுத்தியுள்ளது .
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குரங்கின் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து அந்த குரங்கை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 2-வது தெருவில் நேற்று காலை சிறுவர்கள் வழக்கம்போல் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு திடீரென சிறுவர்களை நோக்கி பாய்ந்துள்ளது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த சிறுவர்களை குரங்கு கடித்துக் காயப்படுத்தியுள்ளது.சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், அவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.சம்பவம் குறித்து அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் கவுசல்யா பிரகாஷ் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குரங்கின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.அதை உயிருடன் பிடித்து அப்புறப்படுத்தும் நோக்கில் அப்பகுதியில் கூண்டு அமைக்கப்பட்டது.கூண்டுக்குள் வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதன் மூலம் குரங்கை உள்ளே வரவழைத்து பிடிக்க வனத்துறை ஊழியர்கள் திட்டமிட்டனர்.ஆனால், கூண்டில் சிக்காமல் குரங்கு திடீரென அங்கிருந்து தப்பியோடியது. இதனால் குரங்கை பிடிக்கும் முயற்சி உடனடியாக வெற்றி பெறவில்லை.எனினும், குரங்கு மீண்டும் அந்தப் பகுதிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதால் கூண்டு தொடர்ந்து அங்கே வைக்கப்பட்டுள்ளது.வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.கூடுவாஞ்சேரி மற்றும் நந்திவரம் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் புதிதல்ல என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு நந்திவரம் புதுப்பாளையத்தம்மன் கோவிலுக்கு வழிபாட்டுக்காக வந்த 5 பக்தர்களை குரங்கு கடித்துக் காயப்படுத்தியுள்ளது.மேலும், சுமார் 20 நாட்களுக்கு முன்பு நந்திவரம் அங்கன்வாடி மையம் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களையும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் குரங்கு கடித்ததாக கூறப்படுகிறது.தற்போது மீண்டும் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மனிதர்கள் தொடர்ந்து உணவு வழங்கும் இடங்களை குரங்குகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும். இதனால் அந்தப் பகுதிகளுக்கு மீண்டும் மீண்டும் வருவதுடன், உணவு கிடைக்காத நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் அல்லது தாக்கும் நிலையும் ஏற்படலாம்.எனவே குரங்குகளை நெருங்கிச் செல்லாமலும், அவற்றுக்கு உணவு வழங்காமலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தற்போது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குரங்கை விரைந்து பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் ..

