திருச்சி அரியமங்கலத்தில் புல்டோசரில் பேட்டரி திருடிய 4 பேர் கைது 
திருச்சி அரியமங்கலம் ரிட்ஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது52). இவர் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது ஹிட்டாச்சி புல்டோசர் வாகனத்தை கடந்த 9 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் ரிட்ஸ் அவென்யூ காலியிடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை 7 மணி அளவில் வந்து பார்த்தபோது, வாகனத்தில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 பேட்டரிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கடேசன் திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இந்த புகாரின் பேரில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நடு கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது19), மதுபாலன் (வயது19), அரியமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சஞ்சய் (வயது22), கள்ளங்குத்து திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பூபதி (வயது19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

