முருகன் கோயில் கோபுரக் கலசங்களில் தங்க முலாம் 2 வருடங்களில் இரண்டு முறை கருமை நிறமாக மாறியது ஏன்? இந்து திருக்கோயில் இயக்க நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி கேள்வி

இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கநிறுவனர் மற்றும் தலைவரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
– HR & CE நிர்வாகமே! உடனடியாக நடவடிக்கை எடு!
எட்டுக்குடி முருகன் கோயில் கோபுரக் கலசங்களில் தங்க முலாம் கருமை நிறமாக மாறியது ஏன்?
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நன்கொடையாளர் மூலம் 65 கிராம் தங்கம் பெறப்பட்டு, எட்டு கோபுரக் கலசங்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், குடமுழுக்கு நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரக் கலசங்கள் கருமை நிறமாக மாறியிருப்பது பக்தர்களிடையே பெரும் வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை கோபுரக் கலசங்களைக் கீழே இறக்கி, மீண்டும் தங்க முலாம் பூசி பொருத்தியதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் அவை கருமை நிறமாக மாறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா?
தங்க முலாம் பூசும் பணியில் தரமான பொருட்களும் முறையான தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டனவா?
இப்பணிக்காகச் செலவிடப்பட்ட தொகை, பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் பணியின் தரம் ஆகியவை முறையாகக் கண்காணிக்கப்பட்டனவா?
இவை அனைத்தும் உரிய விசாரணையின் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமே!
1. எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோபுரக் கலசங்கள் கருமை நிறமாக மாறியதற்கான காரணத்தைக் கண்டறிய உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
2. தங்கத்தின் அளவு, அதன் பயன்பாடு, தங்க முலாம் பூசுவதற்கான செலவு மற்றும் பணியின் தரம் ஆகியவற்றை உரிய நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.
3. குடமுழுக்கு காலத்தில் இப்பணிக்குப் பொறுப்பாக இருந்த அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பொறுப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
4. விசாரணையில் முறைகேடு அல்லது அலட்சியம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. விசாரணையின் முடிவுகளையும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் பக்தர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இறைவனுக்குச் செய்யப்படும் திருப்பணிகளில் வெளிப்படைத்தன்மையும் தரமும் கட்டாயம் இருக்க வேண்டும். பக்தர்களின் நம்பிக்கையையும் நன்கொடையாளர்களின் அர்ப்பணிப்பையும் காப்பது அறநிலையத்துறையின் கடமையாகும்.
எனவே, இப்பிரச்சினையில் காலம் தாழ்த்தாமல் உரிய விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர்ந்து, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

