Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மீண்டும் வீட்டு காவலில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு

0

'- Advertisement -

மாடு மேய்க்கும் தரிசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சரை சந்திக்க இருந்த விவசாயிகள் திருச்சியில் வீட்டுக்காவல்.

Ad banner

புதுக்கோட்டை மாவட்டம், மங்கனூரில் மாடு மேய்க்கும் தரிசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக் கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜன் மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரை சந்திப்பதற்காக திருச்சியில் இருந்து புறப்பட இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகளை, திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

புதுக்கோட்டை மாவட்டம், மங்கனூர் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாடுகளை மேய்ப்பது மற்றும் பால் கறந்து விற்பனை செய்வது இருந்து வருகிறது. அப்பகுதியில் போதிய நீராதாரம் இல்லாததால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. 400 அடி ஆழத்திற்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

இதனால், அப்பகுதி மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்காக அங்குள்ள தரிசு நிலத்தையே நம்பியுள்ளனர். இந்நிலையில், மாடுகள் மேய்க்கும் தரிசு நிலத்தை அரசின் விதிமுறைகளை மீறி, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடற்பாசி சுத்திகரிப்புத் தொடர்பான தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.

அரசின் விதிமுறைகளின்படி, இதுபோன்ற நிலத்தை வேறு பயன்பாட்டிற்காக ஒதுக்க வேண்டுமானால், அதற்குப் பதிலாக மாற்று நிலம் வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. நிலம் ஒதுக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அங்கு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது பணிகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி பணிகளைத் தடுத்து நிறுத்தினோம். வரும் 27ஆம் தேதி வரை அங்கு வேறு எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து பணியாளர்கள் வெளியேறினர்.

இதையடுத்து, நிலம் ஒதுக்கீடு தொடர்பான அரசாணை மற்றும் சட்ட விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவும் முடிவு செய்தோம்.

இதற்காக புதுக்கோட்டையில் இருந்து விவசாயிகள் திருச்சிக்கு வந்துள்ளனர். மீன்வளத்துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக அதிகாலை 4 மணிக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், நள்ளிரவு 1 மணிக்கே காவல்துறையினர் வந்து எங்களை வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தெரிவித்தபோது, அவர் வருமாறு அழைப்பு விடுத்தார். இருப்பினும், காவல்துறையினர் எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை. காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இங்கேயே நின்றுகொண்டு விவசாயிகள் வெளியே செல்லக் கூடாது எனத் தடுத்து வருகின்றனர்.

ஜனநாயக நாட்டில் எங்களது உரிமைகளைக் கேட்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

மங்கனூர் கிராமத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில், கால்நடைகளை மேய்த்து பால் விற்பனை செய்வதன் மூலமாகவே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில் மாடு மேய்க்கும் தரிசு நிலம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நில ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி அரசிடம் முறையிடச் செல்லும் விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவது வேதனையளிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், நில ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மாநில செய்தி தொடர்பாளர் பிரேம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.