அரையாண்டு தேர்வு விடுமுறையில் எந்த பள்ளியிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி, தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய மூன்று இயக்ககங்களின் இயக்குநர்கள் இணைந்து இந்த முக்கியச் சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEO) அனுப்பியுள்ளனர் .
1 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வு: தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் முடிந்த பிறகு, வரும் டிசம்பர் 24, 2026 (24-12-2026) முதல் ஜனவரி 3, 2027 (03-01-2027) வரை மொத்தம் 11 நாட்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
விடுமுறை நாட்கள் முடிவடைந்து, ஜனவரி 4, 2027 (04.01.2027) திங்கட்கிழமை அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான அறிவுறுத்தல்கள்
விடுமுறை நாட்களில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அடுத்த பருவத்திற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குப் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
அரையாண்டு விடுமுறை விடப்படும் நாட்களில், எந்தவொரு பள்ளியிலும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் (Special Classes) எதுவும் நடத்தக்கூடாது எனக் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றே, 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 3ஆம் பருவத்திற்கான (3rd Term) பாடப்புத்தகங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும்.
விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பதிவு: பள்ளி திறக்கும் அன்றே, திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை மாணவர்களிடம் வழங்க வேண்டும். மேலும், மாணவர்களின் மதிப்பெண்களை உரிய பதிவேடுகளில் (Registers) முறையாகப் பதிவு செய்திட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

