மகளிர் தையல் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை திருச்சியில் பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி,


100 நிமிடங்களில் 1,000 க்கு மேற்பட்ட பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி , திருச்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது .
பெண்களின் கைத்திறனையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்யும் வகையில், ‘மகளிர் தையல் கலைஞர்கள் கூட்டமைப்பு’ (Women Tailors Federation) சார்பில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவி பாமா கணேசன், செயலாளர் சுதா பிரபாகரன், பொருளாளர் சகி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு தையல் திறனையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில், 100 நிமிடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்றுப் பல்வேறு வகையிலான ஆடைகளைத் தயாரிக்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி, திருச்சி தூய வளனார் கல்லூரியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளனர்.
பெண் தையல் கலைஞர்களின் திறமைகளை அங்கீகரித்தல், அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவசப் பயிற்சி அளித்தல் மற்றும் பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குதல் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. மேலும், தையல் கலைஞர்களுக்குத் தேவையான துணி ,ஊசி, நூல் போன்ற அனைத்து உபகரணங்களும் இலவசமாகவே வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் நலவாரிய அட்டை மற்றும் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக, இந்த 100 நிமிடங்களில் தையல் கலைஞர்களால் உருவாக்கப்படும் அனைத்து ஆடைகளும் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன என தெரிவித்தனர்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியை முழுக்க முழுக்க பெண்களே ஒருங்கிணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

