திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பிரீமியர் லீக் 2026” வெகு விமரிசையாகத் தொடங்கியது. 13 மாவட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக்கொள்ளும் இந்த போட்டியில் பரிசுத்தொகை ரூ. 50 லட்சம்
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 13 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் விளையாட்டுப் போட்டி: ரூ.50 லட்சம் மதிப்பிலான பரிசுகள் அறிவிப்பு!
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பிரம்மாண்ட விளையாட்டு விழா “தனலட்சுமி சீனிவாசன் பிரீமியர் லீக் 2026” வெகு விமரிசையாகத் தொடங்கியது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படி பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறை இயக்குநரகம் சார்பில் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, இப்போட்டிகளுக்கான மாணவர் பதிவு செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற தொடக்க விழாவில், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ரஞ்சன், பதிவாளர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இப்போட்டிகளில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கரூர், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி அணிகள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர். 
முன்னதாக மாணவர்களிடையே பேசிய துணை வேந்தர் டாக்டர் ரஞ்சன் அவர்கள் விளையாட்டு போட்டியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். பதிவாளர் டாக்டர் செல்வகுமார் அவர்கள் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த மாபெரும் விளையாட்டு விழாவில் கபடி, கைப்பந்து போட்டி, கோ-கோ, பூப்பந்தாட்டம் உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகளும்; 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற தடகளப் போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று குழு போட்டியான கபடி போட்டி சிறப்பாக நடைபெற்றது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டியில் கலந்து கொண்டனர் தொடர்ந்து இரண்டு நாட்கள் கபடி போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் பள்ளிக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
குழு விளையாட்டுகள்: முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1 லட்சம், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ. 75 ஆயிரம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெறும் அணிகளுக்குத் தலா ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
தடகளப் போட்டிகள்: முதலிடம் பெறுபவருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ. 30 ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
மேலும், மாணவர்களின் பயண வசதியை ஊக்குவிக்கும் விதமாக, போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பேருந்துக் கட்டணமாகத் தலா ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் குழு போட்டியான கைப்பந்தாட்டம் அக்டோபர் 22, 23 & 24 ஆகிய தேதிகளிலும், கோ கோ போட்டி மற்றும் பூப்பந்தாட்டம் அக்டோபர் 26, 27 & 28 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இறுதியாக தடகள போட்டிகள் நவம்பர் மாதம் 13, 14 & 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

