டாஸ்மாக் பார்களில் இனி உணவுக்கூடம் நடத்தி கொள்ளலாம். அக்டோபர் 5ம் தேதி டாஸ்மாக் பார் டெண்டர் திறக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டி: டாஸ்மாக் டெண்டர் தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அக்டோபர் 5ம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளது. அதில், விதிமுறைகளின்படி தகுதி பெறும் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படும். அதன்பிறகு சுமார் 5 அல்லது 6 நாட்கள் ஆவணப்பணிகள் நடைபெற்று, திட்டம் நடைமுறைக்கு வரும். ஆனால் டாஸ்மாக் நிர்வாகத்தில் முழுமையான மாற்றத்தை கொண்டு வருவதில் அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. கடைகளின் விற்பனையை அதிகரிப்பது அரசின் நோக்கம் அல்ல. டாஸ்மாக்கில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்வது போன்ற விதிமீறல்கள் நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எப்எல்2 பார் திடீரென மூடி, டக்குன்னு திறப்பதாக கூறுகின்றனர். அது அப்படி இல்லை. எப்.எல்.2 உரிமம் தொடர்பான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட கடைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். தவறின் தன்மைக்கு ஏற்ப 30, 60 அல்லது 90 நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்ய முடியும். சஸ்பெண்ட் காலம் முடிந்த பிறகு கடை மீண்டும் திறக்கப்படுகிறது. இதில், மீண்டும் விதிமீறல் நடைபெற்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்கள் நடைபெற்றால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
முதலில் எப்.எல்.1 அரசு மதுபான கடைகளில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும். இன்னும் 2 மாதங்களில் எப்எல்1 கடைகள் முறையான பாதைக்கு கொண்டு வரப்படும். அதன் பின்னர், எப்.எல்.2 விவகாரங்களில் முழு கவனம் செலுத்தப்படும். பார் டெண்டர் வரும் போது அதில், டாஸ்மாக் பார்களில் உணவு கூடம் நடத்திக் கொள்ளலாம் என்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தவெக ஆட்சிக்கு வந்தபின் நீங்கள் ரூ.100 கோடி சொத்து குவித்து உள்ளீர்கள் என்று செய்தி வருகிறதே? என்ற கேள்விக்கு, ”டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. அதனால், தற்போது டாஸ்மாக் அமைச்சர் அல்லது நிர்வாகத்தை பற்றி பேசும் போது கூட பணத்தை மையப்படுத்தியே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதனால், தான் என்னை குறித்து ரூ.100 கோடி, ரூ.200 கோடி என எழுதுகின்றனர்” என்று அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
நடிகர் விஜய் சேதுபதி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விக்னேஷ், ”சிலர் பணத்துக்காக பேசுகின்றனர். சிலர் ஏதாவது ஒரு வகையில் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எங்களைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதற்கு எங்களுக்கு நேரம் இல்லை. தவறான தகவல்களை பரப்புபவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கலாம். அதுபற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை” என்று கூறினார்.

