அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற தொ.மு.ச. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற தொ.மு.ச. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொ.மு.ச.) தலைமைச் செயற்குழு கூட்டம், அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக அரசால் அறிவிக்கப்பட்ட ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ த.வெ.க. அரசு சீர்குலைக்கக் கூடாது; தமிழக அரசை விமர்சிப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவி பழிவாங்கும் போக்கை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்; கொள்கைத் தெளிவற்ற முறையில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு, திமுக மீது புழுதிவாரித் தூற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம் என்பன உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகம் கூறியதாவது:
மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி, அவர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றன. அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் எனச் செயற்குழுக் கூட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே மத்திய அரசால் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்த முடியும். ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அதனைச் செயல்படுத்த மத்திய அரசு அவசரம் காட்டுகிறது. மத்திய அரசு இந்த 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் செயல்படுத்தக் கூடாது.
திமுக ஆட்சியில் ஓய்வூதியர்களுக்கு ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதுள்ள த.வெ.க. அரசு நிதி இல்லை எனக் கூறி அத்திட்டத்தைப் புறக்கணிக்கிறது. அரசு உடனடியாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்துகிறது. தனியார்மயம் வந்தால் இடஒதுக்கீடு பறிபோகும். அரசுத் துறையாக இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு அனைத்துத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்.
திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த சாதனைகளை மறைக்கும் முயற்சியில்தான் த.வெ.க. அரசு ஈடுபட்டு வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். திமுக ஆட்சியிலும் அதை எதிர்த்தோம்; தற்போதைய ஆட்சியிலும் அதை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

