திருச்சி விமான நிலையத்தில் வேலை என நம்பி ரூ.1,08,000 ஏமாந்த வாலிபர்
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 37) இவர் ஆன்லைனில் ஓ.எல்.எக்ஸ் மூலம் உள்நாட்டு, சர்வதேச விமான நிலைய தரைப்பணியாளர் – இண்டிகோ ஏர்லைன்ஸ் என்ற வேலையைத் தேடி வந்துள்ளார். பின்னர், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன் மூலம் அவரைத் தொடர்புகொண்டு, விமான நிலையத்தில் வேலை தருவதாகவும், அதற்காகப் பதிவுக் கட்டணமாக ரூ.1000 கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு ராஜசேகர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, விவேக் ராய் என்பவர் அவரைத் தொடர்புகொண்டு, சீருடை, ஒப்பந்தக் கட்டணம் மற்றும் காப்பீட்டுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என கூறி, கியூ ஆர் குறியீட்டை அனுப்பி உள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி, ராஜசேகர் தனது வங்கி கணக்கிலிருந்து பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1,08,000 தொகையை அனுப்பி உள்ளார்.
பின்னர் அவர்கள் மேலும் பணம் கேட்டு உள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் இது தொடர்பாக, ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

