Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் .வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி பார் கவுன்சிலுக்கு வேண்டுகோள்

0

'- Advertisement -

பார் கவுன்சிலுக்கு வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-

Ad banner

தமிழகத்தில் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்த பலர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது போராட்டமாகவே உள்ளது. பல்வேறு வழக்குகளில் நேர்மையான முறையில் சட்ட போராட்டம் நடத்தி இத்தொழிலில் பலரும் வெற்றி கண்டுள்ளனர்.

 

ஆனால் இவர்களின் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பல மூத்த வழக்கறிஞர்கள் பொருளாதார ரீதியாக குடும்பம் நடத்த கூட முடியாமல் தற்போது தவிக்கும் நிலையில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. வசதி படைத்த சிலர் மட்டுமே வழக்கறிஞர் தொழிலில் பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளனர். அதுவும் இவர்களின் தொழில் மூலம் சம்பாதித்தது என்பது குறைவாகும். அவர்களது பரம்பரை சொத்து உள்ளிட்ட வருவாய் மூலமே அவர்கள் தற்போது வசதி படைத்தவர்களாக இருக்கின்றனர். பல வழக்கறிஞர்கள் வறுமைக்கோட்டில் சிக்கி தவித்து வருகின்றனர்.

 

இந்த வகையில் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் கொண்ட சட்டப் படிப்பு முடித்த பலர் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போன்றவற்றில் பணியில் சேர்ந்து அலுவலர்களாக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளனர். இவர்கள் பணியாற்றும் காலத்தில் உரிய சம்பளம், அரசின் சலுகைகள் போன்றவற்றை பெற்று தங்களது குடும்பத்தை வளமாக கட்டமைத்து விட்டனர். குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு போன்றவற்றை செயல்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை கட்டமைத்துக் கொண்டனர்.

 

பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடை உள்ளிட்ட தொகைகளையும் மொத்தமாக பெற்றுக் கொள்கின்றனர். இதன் பின்னரும் அவர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முதுமை காலத்தில் பிள்ளைகளை சார்ந்து இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் மாதந்தோறும் அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின்னர் இறந்து விட்டால் அந்த பென்ஷன் தொகை அவரது மனைவிக்கு வழங்கப்படுகிறது.

 

இந்த வகையில் அரசின் முழு சலுகைகளையும் ஒரு அரசு அலுவலர் பெற்றுக் கொண்டு ஓய்வு பெற்று விடுகிறார். இவ்வாறு சட்டம் பயின்று அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் 60 வயதுக்கு மேல் வழக்கறிஞர்களாக தங்களை பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்கின்றனர். இவர்களை நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாடும் நிலையை மத்திய மாநில அரசுகள் அனுமதித்து வருகிறது. இது தவிர ஓய்வு பெற்ற பின்னரும் மூன்று ஆண்டுகள் சட்டக் கல்வி படித்துவிட்டு வழக்கறிஞராகவும் தொடர்கின்றனர்.

 

குறிப்பாக தமிழகத்தில் வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறை போன்றவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் அந்தத் துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதாடுகின்றனர். இவர்கள் ஏற்கனவே அந்த துறையில் உள்ள நுட்பங்களை அறிந்தவர்களாக இருப்பதாலும், தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களிடம் சீனியர் என்ற அடிப்படையில் அவர்களிடம் பழகி, பல நுட்பங்களுடன் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

குறிப்பாக அரசு துறைகளுக்கு எதிரான வழக்குகளில் இவர்கள் ஆஜராகி தற்போது பணியாற்றும் அரசு ஊழியர்களுடன் கைகோர்த்துக்கொண்டு அரசுக்கு எதிராக செயல்படும் நிலை உள்ளது. இவர்கள் ஏற்கனவே வயதாகி இருப்பதால் நீதிமன்றத்தில் இவர்கள் ஏதோ மூத்த வழக்கறிஞர்கள் என்ற தோற்றத்தை நீதிபதிகள் முன்பும், இளம் வழக்கறிஞர்கள் முன்பும் உருவாக்கிக் கொள்கின்றனர்.. அதேபோல் அரசு ஊழியர்களும் பெரும்பாலான வழக்குகளை இது போன்ற வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் சொத்துக்களை மீட்பதில் பெரும் சிக்கல் நிலவுவதற்கு இதுபோன்ற அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் வழக்கறிஞர்களாக செயல்படுவதே முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு வழக்கறிஞராக பதிவு செய்து செயல்படுவதால் தமிழக அரசு சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் இவர்களுக்கு கிடைக்கிறது. எதிர்பாராத மரணம் போன்றவை நடந்தால் அரசு சார்பில் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியும் இவர்களுக்கு கிடைக்கிறது.

 

இதனால் அரசு பணியின் பென்சனை பெற்றுக் கொண்டு, இது போல் வழக்கறிஞர் தொழிலிலும் ஈடுபட்டு பணம் ஈட்டும் இவர்களால் வளரும் இளம் வழக்கறிஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் குறுக்கு வழியை கையாண்டு வழக்குகளில் வெற்றி பெறுவதால் பொதுமக்களும் இவர்களை தேடி செல்லக்கூடிய நிலை உள்ளது. அதேபோல் வழக்குகளில் தீர்வு காண தற்போது பணியாற்றும் அரசு ஊழியர்களும், பொது மக்களிடம் இந்த வழக்கறிஞர்களுக்கு பரிந்துரை செய்கின்றனர். இதன் காரணமாக செல்வாக்கு மிக்க வழக்கு வழக்கறிஞராக மாறி அதிக அளவில் வழக்கு தொழிலுக்கு கட்டணத்தை இத்தகைய வழக்கறிஞர்கள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கின்றனர். இளம் வழக்கறிஞர்களுக்கு செல்ல வேண்டிய வருமானத்தை இத்தகைய வழக்கறிஞர்கள் தட்டிப் பறிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிய செயலாகும்.

ஆகவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகம், மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்கள் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற பின்னர் 60 வயதுக்கு மேல் சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞர் பணிக்கு வருவோரையும் தடுக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ள இத்தகைய வழக்கறிஞர்களின் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் ..இதனால் இளம் வழக்கறிஞர்களுக்கு வாழ்வாதாரமும்,நிரந்தர வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புதிதாக மூன்றாண்டு ஐந்தாண்டு வழக்கறிஞர் பயில ஆர்வத்துடனும் பலர் சட்டக் கல்லூரியில் சேர்வார்கள் ..எனவே பார் கவுன்சில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வையாபுரி வேண்டுகோள் எடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.