2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் மட்டும் உள்கட்சி பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் அதிமுக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் மற்ற தலைவர்களை விட செங்கோட்டையன் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
செங்கோட்டையன் அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதாவின் பிரச்சார பயணங்களை வகுத்தவர். அதிமுகவின் கொங்கு மண்டல முகமாக வலம் வந்தவர். இது எல்லாம் கடந்த காலம். அதிமுகவின் பவர்சென்டராக கொங்கு மண்டலம் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. சமீபகாலமாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து சற்று விலகியே இருந்தார்.
அவிநாசி அத்திக்கடவு நிகழ்ச்சி பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன, தன் கோபி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆதரவாளர்களை தவிர்த்துவிட்டு அவரின் ஆதரவாளர்களுக்கு பதவியளிப்பது, பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் செங்கோட்டையன் நேரடியாக எடப்பாடியை எதிர்த்தார்.
தேவர் ஜெயந்தி நிகழ்வின்போது கூட, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டால் சந்தோஷப்படுவேன் என்று கூறியிருந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். செங்கோட்டையன் அதிமுகவின் முக்கிய தலைவராக மாறியதற்கு அவரின் ஆழமான கள அரசியல் தான் முக்கிய காரணம். அதிமுக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலான 1977 தொடங்கி 2021 வரை தேர்தல் வரை செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்தில் போட்டியிட்டுள்ளார்.
1996 தேர்தலில் மட்டும் அவர் வெற்றி பெறவில்லை, 2001 தேர்தலில் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்து அதிகமுறை எம்எல்ஏவானர் என்ற பெருமை செங்கோட்டையனுக்கு உள்ளது.
அதிமுக கட்சியில் அதிகமுறை எம்எல்ஏவானர்கள் பட்டியலில் செங்கோட்டையன் முதலிடத்தில் உள்ளார். ஒருபக்கம் அமைச்சர் பதவி, மறுபக்கம் கட்சியில் துணைப் பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்று பவர்ஃபுல்லாக வலம் வந்தவர். ஜெயலலிதா காலத்தில் பவர் சென்டராக இருந்த ஐவர் அணியில் செங்கோட்டையன் இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் தான் அடுத்த முதல்வராக நியமிக்கப்படுவார், கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் கோபி தொகுதியில் செங்கோட்டையனுக்கு தனி செல்வாக்கு இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

