திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது – 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதேஷ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கிருஷ்ணகவுண்டனூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பகடை உருட்டி, பணம் வைத்து சூதாடிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் முள்ளிப்பாடியைச் சேர்ந்த சங்கர் (வயது 25), வையம்பட்டி தவலைவீரன்பட்டியைச் சேர்ந்த காளையரசன் (வயது26), ஆறுமுகம் (வயது47) மற்றும் அப்பு (வயது 24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பகடை உருண்டைகள் மற்றும் 300 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் பயன்படுத்திய 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வையம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

