Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் ஆகி விடுவார் என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் ஜெயிப்பதை திமுகவே விரும்பவில்லையா? கண்டுகொள்ளாத அமைச்சர் கே.என்.நேரு ? தேர்தல் முடிவுக்கு பின் முதல்வரிடம் புகார் அளிக்க இனிகோ திட்டம்..

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் களம், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

Ad banner

இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், தற்போது கடும் மன உளைச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை எதிர்த்து இந்த தொகுதியில் களம் காண்பதால் இது விஜபி தொகுதியாக மாறியது ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியில், திமுகவின் பெரும் தூண்களாக கருதப்படும் அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இனிகோவின் தற்போதைய பிரதான புகாராக உள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது இனிகோ இருதயராஜுக்கு அமைச்சரின் ஆதரவாளர்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக ஒரு தொகுதியில் அமைச்சர் ஒருவர் வியூகம் வகுத்துத் தந்தால் அந்த தொகுதி பலமானதாக மாறும். ஆனால், திருச்சியை பொறுத்தவரை அமைச்சர் ஆட்கள் இனிகோவை தனி மரமாக விட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் தேர்தல் களத்தில் எப்படிச் செயல்படுவது, மக்களை எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தனியாளாகப் போராடி இனிகோ திணறிப்போயுள்ளார். களத்தில் நிலவும் இந்தத் தொய்வு, வெற்றியை பாதிக்குமோ என்ற அச்சம் அவரது ஆதரவாளர்களிடையே மேலோங்கியுள்ளது.

இந்த உதாசீனத்திற்கு பின்னால் ஒரு நுட்பமான அரசியல் கணக்கு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. விஜய்யை எதிர்த்து இனிகோ இருதயராஜ் ஒருவேளை வெற்றி பெற்று விட்டால், அவருக்கு அமைச்சரவையில் ஒரு முக்கிய இடம் அளிக்கப்படும் என்று திமுக தலைமை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருப்பதாக தெரிகிறது. ஆனால், ஒரே மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேருக்கு (நேரு, அன்பில் மகேஸ், இனிகோ) அமைச்சரவையில் இடமளிப்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. அவ்வாறு இனிகோ அமைச்சராகும் பட்சத்தில், தற்போது அமைச்சர்களாக இருக்கும் நேரு அல்லது அன்பில் மகேஸ் ஆகிய இருவரில் ஒருவரது பதவிக்கு ஆபத்து ஏற்படலாம்.இதில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உதயநிதியின் நெருங்கிய நண்பர் மற்றும் இளைஞர் என்பதால் அவரது பதவிக்கு ஆபத்து இல்லை .அமைச்சர் நேரு வயதை காரணத்தைக் காட்டி இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலை ஏற்படலாம் என்பதால் இந்த உதாசீனத்திற்குப் பின்னணியாகச் சொல்லப்படுகிறது.

தனது அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே, இனிகோவின் வெற்றியை அமைச்சர் தரப்பு விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. இதனால்தான் தேர்தல் வேலைகளில் அமைச்சரின் தளபதிகள் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டனர்.

ஆனாலும் திருவெறும்பூர்  தொகுதி வேட்பாளர் அமைச்சர் பொய்யாமொழி காலை 7 மணி முதல் 10 மணி வரை திருவம்பூர் தொகுதியில் பிரச்சார மேற்கொண்டாலும் பெரும்பாலும் கிழக்கு தொகுதியில் இனிக்கோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்,அவருடன் மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் பகுதி செயலாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் என திமுக தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் காலை முதல் இரவு வரை கிழக்கு தொகுதி வேட்பாளருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 

ஆனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் யாரும் கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரவில்லை என்பதால் இனிகோ இருதயராஜின் ஆதரவாளர்கள் இதை கண்டு கொதித்து போயுள்ளனர். ஒருவேளை தேர்தல் முடிவுகள் இனிகோவிற்கு சாதகமாக வராமல் போனால், அதற்கு முழுமுதற் காரணம் அமைச்சர் கே.என்.நேரு ஆட்கள் செய்த உள்ளடி வேலைகள்தான் என்பதை ஆதாரங்களுடன் முன்வைக்க தயாராகிவிட்டனர்.

 

இந்த விவகாரத்தை ஒரு பெரிய பஞ்சாயத்தாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்ல இனிகோ இருதயராஜ் முடிவெடுத்துள்ளார். தேர்தல் களத்தில் நடந்த அத்தனை கசப்பான அனுபவங்களையும், அமைச்சரின் ஆட்கள் எவ்வாறெல்லாம் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதையும் ஒரு விரிவான அறிக்கையாகவே தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சொந்தக் கட்சி வேட்பாளரையே வீழ்த்தும் முயற்சியில் அமைச்சர் ஈடுபட்டாரா அல்லது இது வெறும் தேர்தல் நேரக் குழப்பமா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், திருச்சி திமுகவிற்குள் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.