சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research சென்டர் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் இளையராஜா தரப்பிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இசை புதிய ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, ஐஐடி இயக்குநர் காமகோடி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி, இளையராஜா உள்ளிட்டவர்கள் பேசினர். இளையராஜா பேசுகையில், ”இது எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். இசையைக் கற்றுக்கொள்ள வந்த எனக்கு அப்போது அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். அன்று கிராமத்தில் இருந்து இசையை கற்றுக் கொள்ள எப்படி இருந்தேனோ. இப்போதும் அதேபோலத் தான் இருக்கிறேன்.
மூச்சு விடுவது போல் எனக்கு இசையும் இயற்கையாக வருகிறது.கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள வந்த நான், இன்று என்னுடைய பெயரில் சென்டர் ஆரம்பித்து இசை கற்றுக் கொடுக்கப் போகிறேன் . இது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்த மையத்தில் இருந்து குறைந்தது 200 இளையராஜா உருவாக வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடல்கள் பாடப்பட்டன.
அதற்கு முன்பாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆங்கில மொழியில் தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடப்பட உள்ளதாக அறிவிப்பு செய்தார். இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, ஐஐடி இயக்குநர் காமகோடி, இளையராஜா உள்பட அனைவரும் மேடையில் எழுந்து நின்றனர்.
முதலில் தேசியகீதம் பாடி முடிக்கப்பட்டது. இதையடுத்து திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி தனது இருக்கையில் அமர்ந்தார்.
இந்த சமயத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து இளையராஜா, ஆளுநர் இந்திரசேனாவிடம், தமிழ்த்தாய் வாழ்த்து விபரத்தை கூறி எழுந்து நிற்க கூறினார். உடனடியாக சுதாரித்து கொண்டு ஆளுநர் இந்திரசேனா ரெட்டி தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து ஆளுநர் இந்திரசேனா ரெட்டி இருக்கையில் அமர்ந்தார். ஆனால் அடுத்த நொடியே வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது தானாகவே சுதாரித்து கொண்ட ஆளுநர் இந்திரசேனா ரெட்டி அவராகவே எழுந்து வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை கொடுத்தார்.
இந்த சம்பவம் மேடையில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.