கோடை மழையால் திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து அழியும் நிலை. விவசாயிகள் கவலை
திருச்சி மாவட்டம் திருவானைக்கா கல்லணை நடுகரை பகுதி ஊா்களான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சுமாா் 100 ஏக்கரில் பயிரிட்டிருந்தனா்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு பெய்த கனமழையால், சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடை பயிா்களில் ஒன்றான எள் பயிரிலும், உளுந்திலும் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
கோடை பயிருக்கு தண்ணீா் என்பது ஆகாது என்பா். தற்போது பெய்து வரும் மழை காரணமாக தொடா்ந்து தண்ணீா் தேங்கி நின்றால் எள் பயிா் அழிந்து விடும். இதன் காரணமாக, அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ஏற்கெனவே விவசாயப் பயிா்கள் விளைவிப்பில் தண்ணீரின்றி சரியாக விளைச்சல் இல்லாத நிலையில், கோடை பயிரான எள் மற்றும் உளுந்து பயிா்களாவது கைக்கொடுக்கும் என விவசாயிகள் பயிரிட்டிருந்தனா். ஆனால், தற்போது பெய்து வரும் கனமழையால் கோடை பயிரான எள் மற்றும் உளுந்து விளைச்சலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளளது. பெய்யாமலும் கெடுக்கிறது, பெய்தும் கெடுக்கிறது இந்த மழை என விவசாயிகள் புலம்புகின்றனா்.