Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிஎஸ்கே அணி இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தது ஏன் ?

0

 

“எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது.
ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம், கிரிக்கெட் மீதான காதல், அணியின் மீதான பற்று அவரை தொடர்ந்து இயங்க வைக்கிறது”

சிஎஸ்கே அணி குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில்.

இதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் மகேந்திர சிங் தோனி இப்போதைக்கு ஓய்வு அறிவிக்க மாட்டார் என்பதையே அவர் சூசமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனக்கு ஈடான சிறந்த கேப்டனை கண்டுபிடிக்கும் வரை, உருவாக்கும் வரை தோனி கேப்டனாகத் தொடர்வார் என்று கூட வைத்துக்கொள்ளலாம் என்று பிளெம்மிங் பேச்சின் மூலம் தெரிகிறது.

தோனியும் வியூகமும்

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி களத்துக்கு வந்துவிட்டாலே, அவர் எவ்வாறு வீரர்களைக் கையாள்வார், எந்தெந்த வீரர்களுக்கு எப்போது பந்துவீச வாய்ப்பளிப்பார், பீல்டிங் வியூகம் என அனைத்துமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எதிர் அணியினரும் எதிர்பார்ப்புடன் பார்க்கக் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் வேண்டாம் என நிராகரிக்கப்பட்ட பல வீரர்களை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கி அவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி அவர்களை வேறு கோணத்தில் காட்டியதுண்டு.

உதாரணமாக ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி போன்றோர் நடுவரிசையில் நிதானமாக ஆடக்கூடிய பேட்டர்கள். ஆனால், சிஎஸ்கே அணிக்கு வந்தபின் அவர்களின் பேட்டிங் வியூகமும், ஸ்டைலும் மாறிவிட்டது. எந்த வீரர்களாக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிட்டாலே அவர்களை தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் திறமை தோனிக்கும், சிஎஸ்கே பயிற்சிக்கும் இருக்கிறது என்று அந்த அணியில் உள்ள பல வீரர்கள் பேட்டியிலேயே தெரிவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

இந்த ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியிலிருந்து அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் ஏலத்திலும் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

சி.எஸ்.கே அணி ஏலத்துக்குள் நுழையும் போது அதன் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருந்தது. கிறது. இந்தத் தொகையை வைத்து, ஏலத்தைச் சந்தித்தது. முதலில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீது குறி வைத்தது.

ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறிய நிலையில் அது உண்மையாகி உள்ளது. உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று சிறப்பாகச் செயல்பட்ட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திராவுக்கு அடிப்படை விலை ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்து. ஆனால், கடும் போட்டிக்குப்பின் அவரை ரூ.1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

சிஎஸ்கே அணிக்கு கெய்க்வாட்டுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்க சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவசியம் தேவை. அதனால்தான் தொடக்க ஆட்டகாரருக்காக இடதுகை பேட்டர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியுள்ளது சிஎஸ்கே. அது மட்டுமல்லாமல் ரவீந்திரா சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்பதால், நடுப்பகுதி ஓவர்களிலும் ரவீந்திராவை தோனியால் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

இதுபோன்ற இளம் வீரர்களை தோனி சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக்குவார் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்ததாக நியூசிலந்து ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் கடந்த சீசனில் விலை போகவில்லை. ஆனால் இந்த முறை ஏலத்தில் அவரை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாயிலிருந்து ரூ.13 கோடி அதிகமாக ரூ.14 கோடிக்கு வாங்கியது.

சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதனால்தான் ஆல்ரவுண்டர்கள் ஏலத்தில் வரும்போது அவர்களை தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்குவதை சிஎஸ்கே வியூகமாக வைத்துள்ளது. ஏற்கெனவே ரவீந்திராவை வாங்கியநிலையில் டேரல் மிட்செலை வாங்கியுள்ளது.

டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்துள்ள மிட்செலின் ஸ்ட்ரைக் ரேட் 137க்கும் மேல் வைத்திருக்கிறார். ஒன்டவுன் மற்றும் நடுவரிசையில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக களமிறக்க மிட்ஷெலை விலைக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு தூண் போல் இருந்துவந்தார். ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’. களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சித்து டேரல் மிட்ஷெலை வாங்கியுள்ளது. ராயுடு இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், அவரின் இடத்துக்கு வலுவான ஒரு பேட்டர் தேவை என்பதால், டேரல் மிட்செல் வாங்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர் நீண்டகாலமாக இருந்து வந்தார், கடந்த இரு சீசன்களுக்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டநிலையில் மீண்டும் வாங்கப்பட்டுள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூரை வைத்துக்கொண்டு பல போட்டிகளை தோனி வென்று காட்டியுள்ளார். தோனிக்கு ஏற்ற தளபதியாக இருவரும் பலநேரங்களில் பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அணியை வெல்ல வைத்துள்ளனர். ஆதலால், மீண்டும் ஷர்துலை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடைசிவரை பேட்ஸ்மேன் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தம் இன்றைய அணிகளுக்கு இருக்கிறது. ஷர்துல் தாக்கூர் நன்றாகவே பேட்டிங் செய்யக்கூடியவர், பிஞ்ச் ஹிட்டராக செயல்படக்கூடியவர் என்பதால், அவரை ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அன்கேப்டு வீரரும், 20 வயதான சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். உத்தரப்பிரேதசத்தைச் சேர்ந்த பேட்டர் சமீர் ரிஸ்வி. இவரின் அடிப்படை விலையே ரூ.20 லட்சம்தான். ஆனால், இவரை வாங்குவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், சிஎஸ்கேவும் கடும்போட்டியிட்டன, இடையே டெல்லி கேபிடல்ஸ் அணியும் சேர்ந்து போட்டியிட்டது.

உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில் 9 இன்னிங்ஸில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் சேர்த்தால் சமீர் ரிஸ்வி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டார். 20வயதான ரிஸ்வி பிக்ஹிட்டர், பெரிய ஷாட்களை அடிக்கும் வல்லமை படைத்தவர். சமீபத்தில் நடந்த முஸ்தாக் அலி தொடரில் 18 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசியுள்ளார். தான் சந்தித்த ஒவ்வொரு 11 பந்துகளிலும் ஒரு சிக்ஸரை ரிஸ்வி பறக்கவிட்டதால் சிஎஸ்கே அவரை கொத்திக் கொண்டது.

இதுவரை 11 டி20 போட்டிகளில் மட்டுமே ரிஸ்வி விளையாடி 295 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் சராசரி வைத்துள்ளார். வலதுகை பேட்டரான ரிஸ்வி ஆடவருக்கான மாநில அளவிலான 23வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் அடித்து இறுதிப்போட்டியில் 84 ரன்கள் சேர்த்து உத்தரப்பிரதேசம் வெல்ல காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் 37 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசி இருந்தார். இதனால், ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே அணியில் கிரேட் ஃபினிஷராக தோனி இருந்தாலும் அவரின் பணிச் சுமையைக் குறைக்க மற்றொரு வீரரை உருவாக்குவதும் அவசியம். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே நிர்வாகம் விலைக்கு வாங்கி உருவாக்க இருக்கிறது. மேட்ச் பினிஷிங்கில் சிறப்பாகச் செயல்படும் ரிஸ்வியின் ஸ்ட்ரைக் ரேட் 130 மேல் வைத்துள்ளார். மேலும், டெத் ஓவர்களை விளாசி, பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர் என்பதால், பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு இதுபோன்ற பேட்டர்கள் அவசியம் என்பதால் ரிஸ்வியை சிஎஸ்கே வாங்கியுள்ளது.

சிஎஸ்கே அணியில் இடதுகை பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் பல நேரங்களில் துருப்புச் சீட்டாக இருந்துள்ளனர். ஆதலால்தான் கடந்த காலங்களில் இருந்தே இடதுகை பேட்டர்களுக்கும், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியம் அளிக்கப்படும். இந்தமுறை ஏலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இடம் பெறுவது இதுதான் முதல்முறையாகும். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய திறமை படைத்தவர். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெத் ஓவர்களில் சிறப்பாகவும் பந்துவீசும் திறமை கொண்டவர் என்பதால் முஸ்தபிசுர் ரஹ்மானை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், இவர் போன்ற வீரர் கிடைக்கும்போது, சரியான தருணத்தில் பயன்படுத்தி, வெற்றியும் பெறுவார், அந்த வீரரையும் உலகறியச் செய்வார்.

புதிய பந்தில் பந்துவீச தீபக் சஹர், பதீரணாவுடன் அல்லது மாற்றாக ஒரு பந்துவீச்சாளர் தேவை என்பதால், முஸ்தபிசுர் ரஹ்மான் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்கு வரும் சீசனில் தொடக்கப் பந்துவீச்சாளராகக் கூட முஸ்தபிசுர் மாறினாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை.

பேட்டிங்கில் நடுவரிசையில் அம்பதி ராயுடு இடத்தை நிரப்ப டேரல் மிட்ஷெலும், கெய்க்வாட்டுடன் ஆட்டத்தைத் தொடங்க ரச்சின் ரவீந்திராவும் வாங்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் டேவன் கான்வே ஆட்டத்தைத் தொடங்கினாலும், இந்த சீசனில் ரவீந்திரா அல்லது கான்வே என மாற்றி மாற்றி பயன்படுத்தப்படக்கூடும். இதில் கூடுதலாக ரவீந்திரா ஆல்ர்வுண்டர் என்பதால் அதிகமான வாய்ப்புக் கிடைக்கலாம்.

சிஎஸ்கே அணியையும் தோனியையும் பிரிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற வார்த்தைகளை கால மாற்றத்தால் ஏற்கத்தான் வேண்டும். ஆனால், தோனிக்குப்பின் அடுத்த கேப்டன் யார் என்பதை ரசிகர்களும், பல முன்னாள் வீரர்களும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதற்குரிய சரியான பதில் சிஎஸ்கே நிர்வாகத்திடம் இல்லை.

ஏற்கெனவே ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து கையைச் சுட்டுக்கொண்டதால், அடுத்த கேப்டனாக இளம் வீரரிடம்தான் பொறுப்பு வழங்கப்படும். அந்த இளம் வீரருக்கு தோனி குறைந்தபட்சம் சில சீசன்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வரலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவை வாங்கியபின், அவரின் பெயரும் கேப்டனுக்கு பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.

சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதி இளம் வீரர் ஒருவர் கேப்டனாக வரலாம்.

Leave A Reply

Your email address will not be published.