மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5 மதிப்பெண்கள் அதிகம் எடுத்த தாய்
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர்.
இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி அடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியில் வசித்து வருபவர் 37 வயது தும்மாயி. இவர் 9ம் வகுப்பு வரை ஏற்கனவே படித்திருந்தார். இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி. இவர் தாய் வேலை பார்க்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தும்மாயி இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத விருப்பப்பட்டார். இது தெரிந்த வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர்.
தும்மாயி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார். காலை பள்ளிக்கு சென்று உணவை தயார் செய்து மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு,அதன் பிறகு பயிற்சி பள்ளிக்கு சென்று படித்துவிட்டு மாலை வீடு திரும்புவார். மார்ச் மாதம் யோகேஸ்வரியுடன் தனித்தேர்வராக 10 வகுப்பு பொதுத்தேர்வை தும்மாயியும் எழுதினார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானதில் தும்மாயி 500க்கு 358 மதிப்பெண்களும், யோகேஸ்வரி 353 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
தும்மாயி மகளை விட 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். இதுகுறித்து தும்மாயி ” எனக்கு படிப்பு மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. 2006ல் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். குடும்ப சூழலால் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்தனர். பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் மீண்டும் படிக்க விருப்பம் ஏற்பட்டது. இதனால் தனியார் பயிற்சி பள்ளியில் 10 வகுப்பு தேர்வு எழுதினேன்.அதில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.