திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திருச்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டறிக்கை.
திருச்சியில் சொத்துவரி உயர்வுவை திரும்ப பெறக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
நாளை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (5ந் தேதி) செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் நடைபெறும் அதிமுக ஆர்ப்பட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றவுள்ளார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், ப.குமார், பரஞ்ஜோதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரி 150 சதவீதம் உயர்வு,
ஜெயலலிதா அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்கள் நிறுத்தம் என கடந்த ஒரு மாத காலமாக திமுக அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், தி.மு.க.ஆட்சியை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பாக நாளை (5ந் தேதி செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி கண்டன பேருரை ஆற்றுகிறார்.
அதுசமயம் ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,கிளை கழக நிர்வாகிகள்,அனைத்து அணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளனர்.