
தமிழக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவற்றை உடனடியாக சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME&R) அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் நிலவும் குறைகளை கண்காணிக்க முதற்கட்டமாக 50 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Nodal Officers) நியமிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில், சுகாதாரம், குடிநீர், கழிப்பறை வசதி, நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவமனை கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு, சுற்றுப்புற தூய்மை, உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக அதிகளவில் குறைகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த குறைகளை சரிசெய்ய மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து, மாவட்ட சுகாதார அலுவலர்கள், சுகாதார சேவைகள் இணை இயக்குநர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன் மற்றும் பின் நிலையை காட்டும் புகைப்படங்களுடன் விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களிலிருந்து பெறப்படும் அறிக்கைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் துறைத் தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து புகார்கள் வந்துள்ளதால், அங்கு சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சி,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல், மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரவுகளின்படி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் 50 குறைபாடுகள், மருத்துவ மற்றும் ஊரகச் சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் கீழ் 249 குறைபாடுகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் கீழ் 5 குறைபாடுகள் என மொத்தம் 304 குறைபாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த திட்டத்தின் முதன்மை நோடல் அதிகாரியாக வேலூர்அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை டாக்டர் சுதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார். திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியை டாக்டர் இந்துமதி மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் சிவபிரகாஷ் செயல்பட உள்ளனர்.
மேலும், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் தங்கள் மருத்துவமனைக்கான நோடல் அதிகாரியை உடனடியாக நியமித்து, அதன் விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர். சுகந்தி ராஜகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

