Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இளம் பெண் கொலை .கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில்,10 நாட்களுக்கு முன் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

 

சிறுகளப்பூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நந்தகுமாரின் மனைவி செந்தமிழ்செல்வி (வயது 32). இவர் கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு 10 மணியளவில், வழக்கம்போல் தனது ஆட்டுப்பட்டிக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் நந்தகுமார் மற்றும் உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், காணக்கினியநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

தொடர் தேடுதல் வேட்டையின் போது, பெரிய ஏரியின் கரைப்பகுதியில் செந்தமிழ்செல்வியின் அலைபேசி, செருப்பு மற்றும் துண்டு கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, ஏரியின் நடுவே இருந்த மணல் திட்டில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடைகள் களையப்பட்ட கொடூரமான சூழலில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவரது முகம் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்ததால், அவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

 

சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும், கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுகளப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் திமுகவினர் விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

இந்த திடீர் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்தில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை விரைந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.