Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

14வது ஐ.பி.எல் கோப்பையை வெல்வது யார்? சென்னை- கொல்கத்தா நாளை பலப்பரீட்சை.

14வது ஐ.பி.எல் கோப்பையை வெல்வது யார்? சென்னை- கொல்கத்தா நாளை பலப்பரீட்சை.

0

'- Advertisement -

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை இரவு நடைபெறுகிறது.

இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனி கடைசி ஓவரில் 3 பவுண்டரி அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்து ரசிகர்களை பரவசப்படுத்தியது.

அதே போன்று இறுதிப்போட்டியிலும் கலக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே தொற்றிக் கொண்டு விட்டது.

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (547 ரன்) பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். ருதுராஜ் நாளைய ஆட்டத்தில் 24 ரன்கள் எடுத்தால் அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார். பவுலிங்கில் தீபக் சாஹரின் பந்து வீச்சு கொஞ்சம் பலவீனமாக தென்படுகிறது. கடந்த 5 ஆட்டங்களில் 2 விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவர் தொடக்க கட்ட பவுலிங்கில் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.

சென்னை அணி இந்த சீசனில் 2-வது பேட்டிங் செய்த ஆட்டங்களில் தோற்றதில்லை. 6 முறை வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்திருக்கிறது. அதனால் ‘டாஸ்’ ஜெயித்தால் 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நெருக்கடியை சாதுர்யமாக கையாளும் டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி 4-வது முறையாக (ஏற்கனவே 2010, 2011, 2018-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது)
பட்டத்தை உச்சிமுகருமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

அதே சமயம் 2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி 3-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக காணப்படும் கொல்கத்தா ஏற்கனவே லீக் சுற்றில் இரண்டு முறை சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் காத்திருக்கிறது. மேலும் கொல்கத்தா அணி இறுதி போட்டியில் தோற்றது இல்லை
.இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

போட்டிக்கான பரிசுத்தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டு போன்றே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6¼ கோடியும் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.