திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கிரிக்கெட் அம்பயர் தேர்வு வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
பல விளையாட்டுகள் இருந்தாலும் இந்தியாவில் அனைவரும் விரும்பும் ராஜாவாக மணிமகுடம் சூடி இருப்பது கிரிக்கெட் தான்

கிரிக்கெட்டில் வீரர்கள் எப்படி முக்கியமோ அதை விட முக்கியமானவர்கள் அம்பயர் (Umpire) எனப்படும் நடுவர்கள். பந்து போவதை கணித்து இவர்கள் கைகள் தரும் சமிக்ஞைகளே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும்.
எந்த அணி முதலில் பேட் செய்யப்போகும் என்பதை தீர்மானிக்கும் டாஸ் (Toss) மேற்பார்வை, தவறான பந்து எறிதல்களான எல்பிடபிள்யூ , நோ பால் , வைட் மீதான தீர்ப்பு, போட்டியின் அறிக்கை சமர்ப்பிப்பு, வீரர்களின் ஒழுக்கம் & நடத்தை நெறிமுறை கண்காணிப்புடன் , மழை குறுக்கீடு மற்றும் மோசமான ஒளி போன்ற நிகழ்வுகள் மீதான முடிவுகள் எடுக்கும் பொறுப்பு என நடுவர்களின் பணி ஒரு கிரிக்கெட் போட்டியில் இன்றியமையாதது.
இந்த பொறுப்பான பணியில் இருப்பதை கிரிக்கெட் ஆர்வமுடையவர்கள் மிகவும் விரும்புவார்கள். ஆனால் அதற்கென சில நடைமுறைகள் உள்ளன.
கிரிக்கெட் அணியின் அம்பயர் ஆக விரும்பினால் செய்ய வேண்டியவை :
முதலில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பெயர் பதிவு செய்வது அவசியம். அத்துடன் கிரிக்கெட் சட்டங்கள் பற்றியும் ஸ்கோர் கீப்பிங் + அம்பயர் கோர்ஸ் ல் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். கிரிக்கெட் சங்கத்தின் சுற்றறிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். இப்படி அதற்கான பயிற்சிகளில் கற்றுத் தேர வேண்டும்.
ஏற்கனவே பயிற்சிகளை முடித்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கான இனிய தகவல் தான் இது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) 2026-ஆம் ஆண்டிற்கான நடுவர் தேர்வை ஜூன் 28, அன்று நடத்த உள்ளதாகவும் இதற்கானப் பதிவு விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.
தேர்வு பெறத் தேவையான பொதுவான தகுதிகள் :
கிரிக்கெட் விதிமுறைகள் பற்றிய அறிவு,எழுதுதல் மற்றும் ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி , கிரிக்கெட் மைதானத்தில் செயல்திறன், இவைகளுடன் உள்ளூர் மேட்ச்களுக்கு நடுவராக பணியாற்றிய முன் அனுபவம் ஆகியவை.
தேர்வுகள் மாவட்ட லீக் போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள், மேல்நிலைக்கு பரிந்துரை எனத் தேர்வு நிலைகள் பிரிக்கப்படும். ஆண்டுதோறும் மாவட்ட சங்கங்களும் கிளப்பின் கிரிக்கெட் போட்டிகளுக்காக நடுவர்களை தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவர் பணிக்கான சம்பளம் :
போட்டி நிலையைப் பொறுத்து மாறும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக உள்ளூர் போட்டி ஏன்றால் தினசரி கட்டணம், லீக் போட்டிகள் என்றால் சற்றே கூடுதல் , மாநில அளவில் என்றால் இன்னும் அதிகம் என மாறுதலடையும்.
சென்னை , மதுரை, சேலம் திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் நடைபெறும் இத்தேர்விற்கு, ஆர்வமுள்ளவர்கள் TNCA-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்படிவம் நிரப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

