
தமிழகத்தில் கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பாக ஒவ்வொரு ஊர்களின் உள்ள கோயில்களுக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்புவதற்கு வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்திலும் கடந்த மாதம் இந்து அறநிலையத் துறை சார்பாக அதிகாரிகள் வந்து திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் யானை லட்சுமி, திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளை ஆய்வு செய்தார்கள்.
அதனை தொடர்ந்து அங்கு அதிகாரிகள் யானைகள் பராமரிக்கப்படும் இடங்களில் காடுகளை போலவே அமைந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவைகளுக்கு குளிப்பதற்கு குளியல் தொட்டி முதல்கட்டமாக ஸ்ரீரங்கத்தில் அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை லட்சுமிக்கு ஷவர் மூலமாக குளிப்பதற்கு அதிக வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட குளியல் தொட்டி திறக்கப்பட்டது.
அதற்காக இன்று காலை நாகநாதசுவாமி கோவில் பின்புறம் குளியல் தொட்டி அமைந்துள்ள இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு யானை லட்சுமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு குளியல் நிகழ்ச்சிக்கு தயார் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மலைக்கோட்டை திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி தலைமை தாங்கினார்.
பின்னர் அதிகாரிகளின் அனுமதியுடன் யானைப்பாகன் லட்சுமி யாணையை குளியல் தொட்டிக்குள் மெதுவாக அழைத்து வந்தார்.
அப்போது புதிதாக குளியல் தொட்டியை பார்த்த யானை லட்சுமி குதுகலத்துடன் துள்ளி குதிக்க இதனை பார்ப்பதற்காக தாயுமானசுவாமி கோவில் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பொதுமக்கள் ஆர்வத்துடன் மேலும் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் செல்போனில் படம் பிடித்தவாறு மகிழ்ச்சியுடன் யானை குளிப்பதை பார்த்து ரசித்தனர்.
அதைத்தொடர்ந்து குளியல் தொட்டிக்கு உள்ளே இறங்கிய யானை லட்சுமி நீண்ட நேரமாக எழும்பாமல் குதுகலமாக குளியல் தொட்டிக்குள் ஆனந்த நீச்சல் போட்டுக் கொண்டு மக்களின் மீது தண்ணீரை அடித்தவாறு இருந்தது. இதனை பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சி தொடங்கிய போது மின்சாரம் இல்லாத காரணத்தால் ஷவர் வேலை செய்யவில்லை. நிகழ்ச்சி முடியும் தருவாயில் மின்சாரம் வந்ததால் ஷவர் வேலை செய்தது.
பின்னர் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
இன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமிக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின் பேரிலும் அமைச்சர் சேகர்பாபு ஆணையின் பேரிலும் 4 அடி உயரத்தில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டி மூலமாக யானை தினமும் குளிப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இந்த குளியல் தொட்டி அமைப்பதற்கு ரூ.5 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. லட்சுமி யானை இனிமேல் சுகாதார முறையில் தினமும் மனமகிழ்ச்சியோடு குளிப்பதற்கு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.










