இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது.
ஆனால் கொரோனாவின் 3-வது அலை 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் பாதிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு போடலாமா? என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது பயனளிக்கும் எனவும், எனவே தடுப்பூசி போட வேண்டும் எனவும் நாங்களும் கூறியிருக்கிறோம்.
ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியுமா? என்பது விவாதத்துக்குரிய கேள்வி. தற்போது அமெரிக்கா மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு வருகிறது. மிகவும் சிறிய குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக போதுமான தரவுகள் நமக்கு கிடைக்கும் வரை,
இந்த விவகாரத்தில் நாம் முடிவுக்கு வரமுடியாது.
அதேநேரம் 2-18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வை நாம் நடத்தி வருகிறோம். இதற்கான முடிவுகள் செப்டம்பர்-அக்டோபரில் கிடைக்கும். அப்போது நாம் முடிவு எடுக்க முடியும்.
இவ்வாறு பல்ராம் பார்கவா தெரிவித்தார்.