திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை .புகார் அளிக்க மகளிர் காவல் நிலையத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்.
திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
மகளிர் காவல் நிலையத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம், கொன்னைக்குடி ஊராட்சியைச் சேர்ந்த 80 சதவிகிதம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், கடந்த 23-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, வீட்டின் பின்வாசல் வழியாக அத்துமீறி நுழைந்த தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 45) என்பவர், அந்தப் பெண்ணை வெளியில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த கிராமத்து இளைஞர் ஒருவர் சத்தம் போட்டபடி ஓடிவந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் தப்பியோட முயன்றார். அதற்குள் அங்கு திரண்ட பொதுமக்கள், அவரைப் பிடித்து தர்மஅடி கொடுத்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து லால்குடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த ‘தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்’ மாநில செயலாளர் பி.எம். இளங்கோவன், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ், ரஜினிகாந்த், சித்ரா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விபரம் கேட்டறிந்தனர்.

அப்போது, சம்பவம் நடந்த நாளன்று லால்குடி மகளிர் போலீசார், விதிகளை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு வற்புறுத்தியுள்ளனர். “வீட்டிற்கு வந்துதானே விசாரிக்க வேண்டும்?” என்று உறவினர்கள் கேட்டதற்கு, “10 நிமிடங்களில் முடிந்துவிடும்” எனக் கூறி காலை 11 மணிக்கு வரவழைத்துள்ளனர். ஆனால், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் இரவு 7 மணி வரை சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக எந்தவித விசாரணையும் இன்றி காவல் நிலையத்திலேயே காக்க வைத்து அலைக்கழித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளர் பி.எம். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சட்டவிதிகளுக்குப் புறம்பாக காவல் நிலையத்திற்கு வரவழைத்து, 8 மணி நேரம் காக்க வைத்த லால்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது தமிழக அரசு கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்தப் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளி தியாகராஜன் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே இந்த கிராமத்தில் வேறொரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் குற்றவாளிகள் தப்பினர். அதுபோன்ற நிலை இந்த வழக்கில் ஏற்பட்டுவிடக் கூடாது. தமிழகத்தில் சமீப காலமாக குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனை தடுக்கவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

