Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2026-27 கல்வி ஆண்டில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் கூடிய நவீன இலவச சைக்கிள்கள் வழங்க முதல்வர் விஜய் அறிவிப்பு

0

'- Advertisement -

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 55,93,170 மாணவர்களுக்கு, 2027-28ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட உள்ள விலையில்லா பள்ளிப் பைகளை கொள்முதல் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

Ad banner

இதற்காக சுமார் ரூ.103.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக வழங்கப்படும் பேக் பேக் எனப்படும் பள்ளிப் பைகளை கொள்முதல் செய்வதற்கான இந்த டெண்டரில், தகுதிக்கான நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் தொடர்பான விரிவான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

டெண்டர் தொடர்பான முன்மொழிவு கூட்டம் நவம்பர் 27, 2026 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 21, 2026 மாலை 6 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வழங்கப்பட்ட பிறகு, ஓராண்டுக்குள் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய அரசு அமைந்த பிறகு 2027-28ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிப் பைகளைக் கொள்முதல் செய்வதற்கான முதல் டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.103.81 கோடியாகும்.

 

பள்ளிப் பைகளுடன் சேர்த்து, 2027-28ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலணிகள், சாக்ஸ், மழைக்கோட்டுகள், கம்பளி ஸ்வெட்டர்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும் தமிழக அரசு டெண்டர்களை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கான கொள்முதல் பணிகளைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

 

மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஷூக்களை வாங்க ரூ.37.24 கோடி மதிப்பிலும், சாக்ஸ்களை வாங்க ரூ.9.07 கோடி மதிப்பிலும் டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 91,771 மழைக்கோட்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக ரூ.3.32 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

செர்ரி சிவப்பு நிறத்தில் 28, 30, 32, 34 இன்ச் அளவுகளில் இவை தயாரிக்கப்பட உள்ளன. கோவை, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன.

 

2026-27ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் கூடிய நவீன இலவச சைக்கிள்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பட்ஜெட்டில் ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.