திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹரி என்ற ஹரி பிரசாத் (வயது 23) இவர் அரியமங்கலம் காமராஜ் ஜி.டி நாயுடு தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது இளைய சகோதரன் அஜய்குமார் இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். ஹரி பிரசாத் இதற்கு முன்பு அரியமங்கலம் நேருஜி நகர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அங்கு தனது வீட்டின் அருகே வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி அன்று ஹரி பிரசாத் தனது மோட்டார் சைக்கிளை மாற்றிக் கொள்வதற்காக சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட தனது மோட்டார் சைக்கிளை எடுத்த போது அது வேலை செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிளை எடுத்து தனது சகோதரர் வீட்டில் நிறுத்தி உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியன் மறுநாள் யோகேஸ்வரன் (வயது22),சரவணன் (வயது25), மற்றும் 17 வயது சிறுவனுடன் ஹரி பிரசாத் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது இது குறித்து அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், ஹரி பிரசாத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன், யோகேஸ்வரன், சரவணன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

