திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை இடித்தது ஏன் ?கையூட்டு வாங்கினார்களா மாநகராட்சி அதிகாரிகள் . உபயோகப்பாளர் உரிமை இயக்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கேள்வி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பிரதான நுழைவு வாயில் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் நோக்கி செல்லும் நகரப் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
இந்நிலையில் இந்த பேருந்து நிறுத்தம் தற்போது சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் இருக்கைகள், மேற்கூரை உள்ளிட்ட இடுப்பாடுகள் அதே இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் புதிதாக ஒரு தனியார் நிறுவன கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. அந்த கட்டுமான நிறுவனம் அமைக்கப்பட்டால் அதன் வாசலில் பேருந்து நிறுத்தம் இருந்தால் இடையூராக இருக்கும். அதோடு தனியார் நிறுவன கட்டடத்திற்கு முகப்பு பகுதி எழிலழகு பாதிக்கும் என்ற காரணத்தினால் இது திட்டமிட்டு இடிக்கப்பட்டது.
பேருந்து நிறுத்தத்தை சுக்குநுறாக உடைத்ததோடு அப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையும் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்டுள்ளது. சாக்கடையை அடைத்து கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்குள் வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் மண் நிரப்பி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாக்கடை முற்றிலும் அடைக்கப்பட்டதால் திருச்சி ஜங்ஷன்,- தலைமை தபால் நிலையம் சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பகுதியில் தனியார் விடுதிகள், காலணி கடை, பத்திரிகை அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இந்த சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. தினமும் மாநகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள இந்த பகுதியில் இப்படி ஒரு அத்துமீறல் நடந்துள்ளது.
ஏற்கனவே இந்த வார்டில் பணியாற்றிய இளநிலை பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கண்டும் காணாமல் இருந்ததுதான் இதற்கு காரணம்.
தனியார் நிறுவன கட்டுமான பணிக்காக பேருந்து நிறுத்தம் உடைக்கப்பட்டது, சாக்கடையை அடைத்து பொதுமக்களுக்கு இடையூற ஏற்படுத்தியதற்கு உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒரு தனியார் நிறுவனம் எப்படி இவ்வளவு துணிச்சலோடு பேருந்து நிறுத்தத்தை இடித்ததோடு சாக்கடையை அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தைரியம் வந்தது என்பது தெரியவில்லை.
இதற்கு முழுக்க முழுக்க மாநகராட்சி அதிகாரிகள் தான் பொறுப்பு. இதற்கு முன்னர் இந்த வார்டில் பணியாற்றிய இளநிலை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும்.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து பேருந்து நிறுத்தத்தை உடைத்தவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே இடத்தில் பேருந்து நிறுத்தத்தை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும். உடனடியாக சாக்கடை அடைக்கப்பட்டு இருப்பதை அகற்றி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல திருச்சி மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால், திருச்சி மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி

