
இன்று கார்கில் வெற்றி நாள்: திருச்சியில் மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி
ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை.
இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், நாடு முழுவதும் ‘கார்கில் வெற்றி நாள்’ இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கார்கில் போரில் முதன்முதலில் தனது உயிரைத் தியாகம் செய்த, திருச்சி மேஜர் சரவணன் நினைவிடத்தில் ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
கடல் மட்டத்திலிருந்து 14,229 அடி உயரத்தில் உள்ள காஷ்மீரின் ‘கார்கில்’ எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவ ஊடுருவல்காரர்களைத் தடுத்து விரட்டுவதற்காக, இந்திய ராணுவம் கடந்த 1999-ஆம் ஆண்டு மே மாதம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் போரைத் தொடங்கியது.
இப்போரின் போது, திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் எதிரிகளின் பதுங்கு குழிகளை அழித்தபோது, எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். நாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த மேஜர் சரவணனின் நினைவைப் போற்றும் வகையில், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ரவுண்டானாவில் மேஜர் சரவணன் நினைவிடமும், அங்கு தேசியக் கொடியைத் தாங்கி நிற்கும் 52 அடி உயர தேசிய கொடிக்கம்பமும், பிரம்மாண்டமான மின்விளக்கும் நிறுவப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ‘கார்கில் வெற்றி நாள்’ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி கண்டோன்மெண்ட் செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் உள்ள ‘வீர் சக்ரா’ மேஜர் சரவணனின் நினைவுத் தூணிற்கும், அவரது திருவுருவப் படத்திற்கும் இன்று முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகளும், ராணுவ வீரர்களும், பொதுமக்களும் மலர்வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

