Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொலையாளி தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம்

0

'- Advertisement -

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பெண்ணின் கள்ளக்காதலன் மீன் வியாபாரி, அவரை தேடி வந்த தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Ad banner

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கண்ணுதோப்பு பாலம் பகுதியில் சாலையோர மண் குவியலில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் சம்பவத்தன்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் உடலை மீட்ட நிலையில் அந்த பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அவரது கையில் இருந்த டாட்டூ மற்றும் கொலுசு மூலமாக போலீசார் அந்த பெண், வடலூர் சர்வோதயா நகரைச் சேர்ந்த மஞ்சுளா (வயது 35) என்பதை கண்டுபிடித்தனர். சென்னையில் உள்ள மகளை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆனால் அவரை யார் கொலை செய்தது, எதற்காக கொலை செய்தனர்? பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மஞ்சுளாவின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த போலீசார், சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி சம்பத் (வயது 39) என்பவர் அவருடன் தினமும் நீண்ட நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினர்.

முதலில் சம்பத்தின் வீடடிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, நெய்வேலி ஆர்ச் கேட் அருகே மீன் வறுவல் விற்பனை செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த தனிப்படை போலீசார், எந்த பதற்றமும் இல்லாமல் வியாபாரத்தில் பிஸியாக இருந்த சம்பத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போது தான் அங்கு சுவாரஸ்யமான திருப்பம் அரங்கேறியது.

தனிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் வாடிக்கையாளர் போல சென்று மீன் வறுவல் கேட்டார். தன்னை தேடி வந்தவர்கள் போலீசார் என்பது தெரியாமல், சம்பத் சிரித்தபடியே மீன் வறுவல் போட்டு கொடுத்தார். பின்னர் சாதாரணமாக பேச்சு கொடுத்தபடியே அவரை போலீசார் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர். ஆரம்பத்தில் எதுவும் தெரியாதது போல பேசிய சம்பத், தனது செல்போன் சிக்கியதும் திணறத் தொடங்கினார்.

மஞ்சுளாவுடன் தினமும் பேசிய ஆதாரங்களை போலீசார் காட்டி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மஞ்சுளாவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

அதாவது, மஞ்சுளா சென்னையில் இருந்து திரும்பிய போது, கோலியனூர் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தானே அழைத்து வந்ததாகவும், கண்ணுதோப்பு பாலம் அருகே இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் மஞ்சுளாவை கொலை செய்து உடலை மண் குவியலில் புதைத்ததாகவும் சம்பத் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பத்தை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் தகராறுக்கான காரணம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னை பிடிக்க வந்த தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் சுட்டுக் கொடுத்து, சில நிமிடங்களிலேயே கைதான சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.